கோலிவுட்டில் தொடரும் ‘நாய் ட்ரெண்ட்’ !

யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலும் போஸ்டரும் வெளியாகியுள்ளன.
கோலிவுட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நபர் காமெடியில் கலக்குவர். அப்படியாக வடிவேலுவின் நீண்ட ஓய்வு, சந்தானத்தின் ஹீரோ பயணம் ஆகியவற்றுக்கு நடுவே தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டு தற்போது வேற லெவலில் வலம்வருபவர் யோகி பாபு.
குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் மிகப் பெரிய ஆதரவைப் பெற்றுள்ள இவரின் கைவசம் உள்ள படங்கள் ஏராளம். அதில் அவர் முன்னணிக் கதாபாத்திரத்திலும் நடிக்கும் ஒரு படமும் அடக்கம். அவர் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் டைட்டிலும், போஸ்டரும் நேற்று (செப்டம்பர் 15) வெளியாகியுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்துக்கு கூர்கா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் கூர்கா போன்ற தோற்றத்தில் இடம்பெற்றுள்ள யோகி பாபுவுடன் ஒரு நாயும் காட்டப்பட்டுள்ளது.
கோலிவுட்டில் இப்போது நாய் ட்ரெண்டா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே வந்த ரஜினியின் காலா பட ஃபர்ஸ்ட் லுக்கில் நாயும் இடம்பெற்றிருந்தது. முன்னதாக வந்த பரியேறும் பெருமாள் பட போஸ்டரிலும் நாய் இடம்பிடித்திருந்தது. சமீபத்தில் வந்த அசோக் செல்வன் நடிக்கும் படமான ஜாக் பட ஃபர்ஸ்ட் லுக்கிலும்கூட நாயும் இடம்பெற்றிருந்தது. அந்த வரிசையில் தற்போது கூர்கா.
டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் இந்தப் படத்தை எடிட்டர் ரூபன், நடன இயக்குநர் சதீஷ், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஆகியோருடன் இணைந்து சாம் ஆண்டனே தயாரிக்கிறார்.
ராஜ் ஆர்யன் இசையமைக்கும் இந்தப் படம் 2019 கோடை விடுமுறை வெளியீடாக வரவுள்ளது.

No comments

Powered by Blogger.