சண்டே சக்சஸ் ஸ்டோரி: ஸ்ரீவித்யா (ரவீந்திரா சர்வீசஸ்)

30 வருடங்களுக்கு முன்பு சென்னையின் சாதாரண குடிசைப் பகுதியில் மிக எளிமையாக வாழ்ந்த ஸ்ரீவித்யா, இன்று 4,000க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உருவெடுத்த சக்சஸ் ஸ்டோரியை இந்த வாரம் காணலாம்.
14 வயதில் காதல் வயப்பட்டு, 17ஆவது வயதில் கல்லூரிப் படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் செய்துகொண்டவர் ஸ்ரீவித்யா. இவருடைய பெற்றோர் கர்நாடக இசைக் கலைஞர்கள். இந்தத் திருமணத்துக்குப் பிறகு தனது குடும்பத்தால் புறக்கணிக்கப்பட, சென்னையின் ஒரு சாதாரண குடிசைப் பகுதியில் புதிதாகத் தனது வாழ்க்கையைத் தொடங்குகிறார். ஆனால் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி, வீட்டை விட்டு வெளியேறி டிரினிட்டி மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட ஊதியம் மாதம் ரூ.800 மட்டுமே. அதிலும் வீட்டு வாடகைக்கே ரூ.250 போய்விடும். அர்ச்சனா, அனுஷ்யா ஆகிய தனது இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பும் இவருக்கு இருந்தது.
இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோதே இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் படிப்பில் இணைந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் மலர் மருத்துவமனை சென்னையில் தொடங்கப்பட்டது. அங்கு ரூ.1,200 ஊதியத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அங்கு நான்கு மாதங்கள் மட்டுமே பணிபுரிந்தார். ட்ரீ மேக்னெட் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை கிடைத்தது ஸ்ரீவித்யாவுக்கு. இங்கு அவருக்கு ஊதியம் மாதம் ரூ.3,200. இந்த வேலையில் அடிக்கடிப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருந்தது. இதனால் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் இவருக்கு விடுமுறை அளிக்க நிர்வாகம் மறுத்தது. அங்கு வேலையை இழக்கவும் நேர்ந்தது.
திரும்பவும் மலர் மருத்துவமனைக்கு வந்தார். மலர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக ரவீந்திர பத்மநாபன் பணியாற்றினார். இவருடைய மகன் தூய்மைப் பணிகளுக்கான ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதில் இவரை இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீவித்யாவிடம் கேட்டார். எம்பிஏ பட்டம் பெற்ற தன்னால் இந்த வேலையைப் பார்க்க முடியாது என முதலில் மறுத்த அவர், பிறகு பெரு நிறுவனங்களுக்கான ஹவுஸ் கீப்பிங் பிரிவில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டார்.
இந்தப் பணிக்கு ஆட்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்குப் பயிற்சியளிப்பது மிகுந்த சவாலாக இருந்தது. பெண்ணாக இருந்துகொண்டு ஆண்கள் கழிவறைகளைத் தூய்மை செய்யும் பணிகளை மேற்பார்வையிடுவது இவருக்கு மிகவும் கடினமான பணியாக இருந்தது. பாதுகாப்புச் சேவைகள் துறையில் ஸ்ரீவித்யா மிகப்பெரிய வெற்றி கண்டதற்கு இந்தத் தொடக்கம்தான் மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்தது. 1991-93ஆம் ஆண்டில் பத்மநாபன் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடத் தொடங்கினார். இத்துறையில் இவருக்கு முக்கிய பலமாக ஸ்ரீவித்யா விளங்கினார்.
இந்தச் சேவையைத் தொடங்கிய பின்னர் எல் & டி நிறுவனத்தில் ஒப்பந்தம் கிடைத்தது. இதற்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் நிறுவனத்துக்குப் பாதுகாப்பு சேவைகள் வழங்கும் ஒப்பந்தம் கிடைத்தது. படிப்படியாகப் பாதுகாப்பு சேவைகள் பிரிவில் வளர்ந்துகொண்டிருந்த நிலையில் 2001ஆம் ஆண்டில் பத்மநாபன் எதிர்பாராத விதமாகச் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவருக்குப் பிறகு அவருடைய குடும்பம் அத்தொழிலை இயக்க ஆர்வம் காட்டவில்லை. அந்நிறுவனத்தை விற்றுவிட முடிவு செய்தனர்.
ரூ.3 கோடி மதிப்பிலான இந்நிறுவனத்தை ரூ.40 லட்சம் ரூபாய்க்கு விற்க பத்மநாபன் குடும்பத்தினர் முன்வந்தனர். பங்குதாரர்களுடன் இணைந்து இந்நிறுவனத்தை ஸ்ரீவித்யாவே வாங்கிக் கொண்டார். நிறுவனம் இவர் கைக்கு மாறிய பிறகு வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தின் பெயரை மாற்றினார். நிறுவனத்தின் எல்லைகள் விரிவுபட்டன.
பாதுகாப்புத் துறையில் பெண்களாலும் சிறப்பான செயலாற்ற முடியும், பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என்ற நிலையை உருவாக்கவே ஸ்ரீவித்யா அதிகப்படியான உழைப்பை வெளிக்காட்ட வேண்டியிருந்தது. தங்களது பாதுகாவலர்கள் இரவு நேரங்களில் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை அறிய இரவில் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொண்டார். தங்களது பாதுகாவலர்கள் இரவு நேரங்களில் மது குடிப்பதோ, சீட்டு விளையாடுவதோ தெரிந்தால் அவர்களை உடனடியாக வேலையை விட்டு நீக்கினார்.
மேலாண்மை வசதிகள் (ஹவுஸ் கீப்பிங், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல்), பாதுகாப்பு பிரிவு, வெளிப்புறச் சேவைகள், ஊதிய மேலாண்மை, ஊழியர் நியமனம், தொழில் துறை பராமரிப்பு, புலனாய்வுச் சேவைகள், பயிற்சிகள் மற்றும் இதர துணைச் சேவைகள் என நிறுவனத்தின் பணிகள் விரிவடைந்தன. அதற்கேற்றவாறு ரவீந்திரா நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஃபோர்டு, போஸ்ச் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கும் இதன் சேவை விரிவடைந்தது. 2012ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரித்தது. அதில் 15 விழுக்காட்டினர் பெண்கள். பாதுகாப்புப் பிரிவில் எல்லோரையும் பெண்களாக்க வேண்டும் என்ற முயற்சியிலும் ஸ்ரீவித்யா ஈடுபட்டுள்ளார். 2012ஆம் ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.22 கோடியாக உயர்ந்துவிட்டது.
தற்போது இந்தியாவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒரே துணிச்சல் மிக்க பெண் இவர்தான். இவருடைய திறமையான சேவைகளுக்காக 2007ஆம் ஆண்டில் பெண் சாதனையாளர் விருது, டை மும்பை வழங்கிய ஸ்த்ரீ ஷக்தி விருது, 2012ஆம் ஆண்டில் சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது, ராஜீவ் காந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி எம்எம்ஏ (தற்காப்புக் கலைகளுக்கான அமைப்பு), இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு, தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராகவும், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான மத்திய கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
சவாலான துறையில் துணிச்சல்மிக்க பெண்ணாகத் தன்னை நிலைநிறுத்தி, பாலினம் திறமைக்குத் தடையல்ல என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவித்யா.

No comments

Powered by Blogger.