யாப்பில் இல்லாத இன்­றைய கூட்­டாட்­சி­யின் எமது விரி­வாக்­கம்!!

இன்­றைய பேரு­ரைக்­கான தலை­யங்­கம் சமஷ்டி பற்­றி­யது. இந்­தச் சொல் பெட­ரல் என்­கின்ற ஆங்­கி­லச் சொல்­
லைக் குறிக்­கி­ற­தா­கத் தமி­ழிலே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருந்­தா­லும் அது வட­மொழி சார்ந்த ஒரு சொல்­லா­கும். பொருத்­த­மான தமிழ்ச் சொல் இல்­லை­யென்­றா­லும் கூட்­டாட்சி அல்­லது இணைப்­பாட்சி என்ற சொற்­கள் தற்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.
சமஷ்­டி­யைத் தனது அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருக்­கின்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யும் சில வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எமது யாப்­பிலே காணப்­ப­டும் வட சொற்­க­ளைத் தமிழ்ச் சொற்­க­ளாக மாற்­றி­ய­போது சமஷ்­டியை இணைப்­பாட்சி என்று மாற்­றி­யி­ருந்­தோம். இந்த மாற்­றத்தை எமது கொள்­கை­யில் ஏற்ப­டுத்­திய மாற்­ற­மா­கக் குற்­றம் சுமத்தி, பிரி­வி­னை­யைக் கோரு­வ­தா­கச் சொல்லி, எமக்­கெ­தி­ராக வழக்­கும் தாக்­கல் செய்­யப்­பட்­டது. இந்த வழக்­கின் விவ­ரங்­களை நான் பின்­னர் எடுத்­துக் கூறு­வேன். ஆனால் தற்­போ­தைக்கு இந்த உரை­யில் சமஷ்டி என்ற சொற் பாவ­னை­யையே நான் பயன்­ப­டுத்­தப் போகி­றேன்.
சமஷ்­டி­யைக் கொள்­கை­யா­கக் கொண்ட ஒரே அர­சி­யல் கட்சி இலங்கை தமிழ் அர­சுச் கட்சி. ஆனால் ஒட்­டு­மொத்­தத் தமிழ் மக்­க­ளு­டைய அடிப்­ப­டைக் கொள்­கை­யாக அது இன்று பரி­ண­மித்­தி­ருக்­கி­றது. எழு­பது வரு­டச் சுதந்­திரச் சரித்­தி­ரத்­தில் பல்­வேறு தமிழ்க் கட்­சி­கள் வெவ்வேறு கொள்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தா­லும் கூட அனைத்­துக் கட்­சி­க­ளும் இன்று இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யின் யாப்­பில் உள்ள கொள்­கையே தமது கொள்­கை­யென்று ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. இப்­ப­டி­யான சந்­தர்ப்­பத்­தில் சமஷ்டி ஆட்சி முறை என்­றால் என்ன என்­ப­தைத் தெளி­வாக வரை­ய­றுத்­துக் கூற வேண்­டி­யது இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி­யி­னு­டைய கட­மை­யென்று நான் கரு­து­கி­றேன்.
துல்­லிய வரை­வி­லக்­க­ணம் இல்லை
சமஷ்டி என்ற அர­சி­யல் கோட்­பாட்­டுக்கு குறித்­த­ வொரு வரை­வி­லக்­க­ணத்­தைக் கொடுப்­பது இய­லாத விட­யம். துல்­லி­ய­மான குறித்த வரை­வி­லக்­க­ணம் ஒன்­றைக் கொடுக்க முடி­யா­விட்­டா­லும் அத­னு­டைய வரை­ய­றை­க­ளை­யும், விரி­வாக்­கத்­தை­ யும் சற்று விளக்­க­மாக முன்­வைப்­பதே இந்­தப் பேரு­ரை­யின் நோக்­க­மா­கும்.
சமஷ்டி ஆட்­சி­முறை இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிற ஏதே­னும் இரண்டு நாடு­க­ளு­டைய ஆட்­சி­மு­றை­கள் ஒரே மாதி­ரி­யாக இருப்­ப­தா­கக் காண­மு­டி­யாது. ஆனா­லும் சமஷ்­டி­யி­னு­டைய சில அடிப்­ப­டைப் பண்­பி­யல்­பு­கள் ஒரு­கு­றித்த நாட்­டின் ஆட்சி முறை­யில் இருக்­கின்­றதா, இல்­லையா? என்று பரி­சீ­லித்­துப் பார்க்க முடி­யும். ‘ஏவி டைசி’ என்­கின்ற மிகப் பிர­ப­ல­மான அர­சி­யல் அறி­வி­ய­லா­ள­ரு­டைய கருத்­துப்­படி சமஷ்டி என்­பது தேசிய ஒரு­மைப்­பாட்­டுக்­கும், பிராந்­தி­யங் கள், அரச அதி­கா­ரங்­களைக் கையாள்­வ­தற்­கும் இடை­யி­லான நடு­நி­லை­யைப் பேணு­கின்ற ஓர் அர­சி­யல் ஒழுங்­க­மை­பா­கும். அவ­ரு­டைய கருத்­துப்­படி சமஷ்­டி­யின் அடிப்­படைக் குணா­தி­சங்­க­ளா­வன:-
1. அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­னு­டைய மீயு­யர் தன்மை 
2. வெவ்வேறு அரச அதி­கா­ரங்­க­ளைச் சம­மா­ன­தும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிப்­பது 
3. அர­ச­மைப்­புச் சட்­டத்­துக்­கான வியாக்­கி­யா­னம் கொடுக்­கும் அதி­கா­ரம் நீதி­மன்­றத்­துக்கு வழங்­கப்­ப­டு­தல் என்­ப­னவாகும் 
இதே­போன்று வெயாரி என்­கின்ற அறி­ஞ­ரின் கூற்­றுப்­படி சமஷ்டி அர­ச­மைப்பு என்­பது அர­சின் வெவ்வேறு மட்­டங்­க­ளுக்­குப் பிரித்­துக் கொடுக்­கப்­ப­டும் அதி­கா­ரங்­க­ளின் மீது அவை ஒவ்­வொன்­றும் முழு­மை­யான அதி­கா­ரத்­தைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்­பதே ஆகும்.
ரொனால்ட் வட்ஸ், பொது­வான அர­சும் பிராந்­திய சுயாட்சி அல­கு­க­ளும் ஆட்­சி­ய­தி­கா­ரங்­கள் பகிர்ந்து கொள்­ளும் முறை என்று சமஷ்­டியை வர்­ணித்­தி­ருக்­கின்­றார். இவர் சமஷ்டி என்­பது, அதி­கார அல­கு­கள் ஒன்­றி­லி­ருந்து மற்­றது தன்­னு­டைய அதி­கா­ரத்­தைப் பெற்­றுக்­கொள்­ளா­மல் நேர­டி­யா­கவே அர­ச­மைப்­புச் சட்­டத்­தி­லி­ருந்து இறை ­மை­யி­ன் அடிப்­ப­டை­யில் பெற்­றி­ருக்க வேண்­டு­மெ­னக் கருத்­து­ரைத்­தி­ருக்­கி­றார்.
வட்­ஸி­னு­டைய சமஷ்­டிக் கோட்­பாட்டை எமது அர­ச­மைப்­புச் சட்ட நிபு­ணர் ரொஹான் எதி­ரி­சின்க பின்­வ­ரும் கூறு­க­ளா­கக் காண்­பித்­தி­ருக்­கி­றார்
1. குடி­மக்­கள் மீது நேர­டி­யாக அதி­கா­ரம் செலுத்­தும் தகை­மை­யுள்ள இரண்டு அரச அமை­வு­கள்: சில சுயா­தீ­னங்­களை உள்­ள­டக்­கிய சட்­ட­வாக்­கங்­கள் மற்­றும் நிறை­வேற்­ற­தி­கா­ரங்­க­ளையும் நிதி வளங்­க­ளை­யும் இவ்­விரு அரச அமை­வு­க­ளி­டையே சட்­ட­பூர்­வ­மா­கப் பகிர்ந்து கொள்­ளும் ஒரு முறைமை. 
2. மத்­திய கொள்கை வகுப்பு நிறு­வ­னங்­க­ ளில் பிராந்­தி­யங்­க­ளின் அபிப்­பி­ரா­யங்­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­ளு­தல். இது மத்­தி­யி­லி­ருக்­கும் இரண்­டாம் (மேல்) சபைக்கு பிராந்­தி­யங்­கள் அல்லது மாகா­ணங்­கள் தமது பிர­தி­நி­தி­களை அனுப்­பு­வ­தன் மூலம் செயற்­ப­டுத்­த­லாம்.
3. ஓர் எழு­தப்­பட்ட, தன்­னிச்­சை­யாக மாற்­றப்­ப­ட­மு­டி­யாத மீயு­யர் அர­ச­மைப்­புச் சட்­டம் 
4. மத்­திக்­கும் மாகா­ண­ங்க­ளுக்­கு­மி­டை­யி­லான சர்ச்­சை­க­ளைத் தீர்க்­கும் ஒரு நடு­நி­லை­யா­ளர் 
5. மத்­தி­யும் மாகா­ணங்­க­ளும் சேர்ந்து கையா­ளு­கின்ற பொறுப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்­கான பொறி­முறை
13ஆம் திருத்­தச் சட்­டம்
இந்­தக் குணா­தி­ச­யங்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் 13ஆம் திருத்­தச்­சட்­டத்­தில் இருக்­கும் குறை­பா­டு­க­ளைத் தன்­னு­டைய பல கட்­டு­ரை­க­ளில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்.
13ஆம் அர­ச­மைப்­புத் திருத்­தம் 1987ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது அந்­தத் திருத்­தம் இலங்­கை­யின் ஆட்சி முறையை ஒற்­றை­யாட்­சி­யி­லி­ருந்து சமஷ்டி ஆட்­சி­மு­றைக்கு மாற்­றி­வி­டு­மென்று குற்­றஞ்­சாட்­டிப் பலர் உயர் நீதி­மன்­றத்தை நாடி­யி­ருந்­த­னர்.
அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் இரண்­டாம் உறுப்­புரை இலங்­கையை ஓர் ஒற்­றை­யாட்சி முறை­யென்று வர்­ணித்­தி­ருக்­கின்ற கார­ணத்­தால், பொது வாக்­கெ­டுப்­பில்­லா­மல் 13ஆம் திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யா­தென்­பது அவர்­க­ளு­டைய வாதம். இந்த மனுக்­களை விசா­ரித்த நீதி­மன்­றக் குழா­மில் ஒன்­பது நீதி­ய­ர­சர்­கள் இருந்­தார்­கள். அதில் நால்­வர் 13ஆம் திருத்­தம் ஒற்­றை­யாட்­சி­மு­றையை மீற­வில்­லை­யென்று தீர்ப்­ப­ளித்­தார்­கள். வேறு நால்­வர் 13ஆம் திருத்­தம் இலங்­கை­யி­னு­டைய அர­ச­மைப்பை ஒற்­றை­யாட்சி முறை­யி­லி­ருந்து சமஷ்டி முறைக்கு மாற்­றி­வி­டு­மென்ற சாரப்­ப­டத் தீர்ப்­ப­ளித்­தார்­கள். ஒன்­ப­தா­வது நீதி­ய­ர­ச­ரான பாரிந்த ரண­சிங்க 13ஆம் திருத்­தத்­தி­லி­ருந்த இரண்டு பிரி­வு­க­ளைச் சுட்­டிக்­காட்டி அவை மாற்­றப்­ப­டா­விட்­டால் பொது வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மெ­னத் தீர்ப்­ப­ளித்­தார்.
அந்த இரண்டு பிரி­வு­க­ளை­யும் மாற்­றி­ய­மைத்த கார­ணத்­தால் தான் 13ஆம் திருத்­தம் பொது வாக்­கெ­டுப்பில்­லா­மல் நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மாகாண நிர­லி­லுள்ள விட­ய­மொன்று சம்­பந்­த­மாக மாகா­ண­மொன்­றின் இணக்­க­மில்­லா­மல் மத்தி சட்­ட­மி­யற்­றி­னால் அந்­தச் சட்­டம் அந்­தக் குறித்த மாகா­ணத்­துக்­குப் பொருந்­தாது என்­கின்ற ஏற்­பாடே மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு அப்­ப­டி­யான சந்­தர்ப்­பத்­தில் மத்தி 2/3 என்ற பெரும்­பான்­மை­யோடு அந்­தச் சட்­டத்தை நிறை­வேற்­றி­னால் இணங்­காத மாகா­ணத்­துக்­கும் அது பொருந்­து­மென்­கின்ற மாற்­றம் செய்­யப்­பட்­டது. ஒற்­றை­யாட்­சி­யின் ஒரு குணா­தி­ச­ய­மா­கிய மத்­திய நாடா­ளு­மன்­றத்­தின் மீயு­யர் சட்­ட­வாக்­கத் தகைமை 13ஆம் திருத்­தத்­துக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட மேற்­கூ­றிய சிறிய திருத்­தத்­தின் முலம் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது.
இதன் கார­ணத்­தால் தான் திவி­நெ­கும திட்­டத்­துக்கு வட மாகா­ணம் இணங்­கி­யி­ராத போதும் 2/3 என்ற பெரும்­பான்­மை­யோடு அது நிறை­வேற்­றப்­பட்டு வடக்கு மாகா­ணம் மீதும் திணிக்­கப்­பட்­டது. வடக்கு மாகா­ணத்­தின் இணக்­கப்­பாடு இல்­லாத கார­ணத்­தால் சாதா­ரண பெரும்­பான்­மை­யோடு அந்­தச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட முடி­யாது என்­கின்ற உயர் நீதி­மன்­றத் தீர்ப்­புக்­கள், மாவை சேனா­தி­ரா­ஜாவை மனு­தா­ர­ரா­கக் கொண்ட இரண்டு வழக்­கு­க­ளூ­டா­கப் பெறப்­பட்­டன.
மாகாண நிர­லி­லுள்ள விட­யங்­கள் மீது இப்­ப­டி­யாக மத்­திய நாடா­ளு­மன்­றம் மேலா­திக்­கம் செலுத்­து­வ­தைத் தவிர்ப்­பது சமஷ்­டி­யின் முத­லா­வது அடிப்­ப­டைக் குணா­தி­ச­ய­மா­கக் கரு­த­லாம். சமஷ்­டி­யின் இரண்­டா­வது அடிப்­ப­டைக் குணா­தி­ச­ய­ மாக நான் கரு­து­வது மாகா­ணத்­துக்கு என்று பகிர்த்த­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரத்தை ஒரு தன்­னிச்­சை­யான அர­ச­மைப்­புத் திருத்­தத்­தின் மூலம் மத்தி மீளப்­பெற முடி­யா­த­தாக இருத்­தல் வேண்­டும்.
இவ்­வி­ரண்டு அடிப்­ப­டைக் குணா­தி­ச­யங்­க ­ளும் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள 13ஆம் திருத்­தத்­தில் இல்­லாத கார­ணத்­தால் இது சமஷ்­டி­யல்ல என்று நாம் கூறி­னா­லும் கூட, மேற்­சொன்ன நான்கு நீதி­ய­ர­சர்­க­ளின் கருத்­துப்­படி 13ஆம் திருத்­தம் இலங்கை அர­ச­மைப்பை ஒற்­றை­யாட்­சி­யி­லி­ருந்து சமஷ்­டிக்கு மாற்­றி­யி­ருக்­கி­றது. ஆனால் மேற்சொன்ன திருத்­தங்­க­ளுக்­குப் பிறகு ஐந்து நீதி­ய­ர­சர்­கள் ஒற்­றை­யாட்சி முறை பாதிக்­கப்­ப­ட­வில்­லை­யெ­னச் சொன்ன கார­ணத்­தால் 5/4 பெரும்­பான்­மை­யின் அடிப்­ப­டை­யில் இன்று நடை­ மு­றை­யி­லி­ருக்­கும் ஒற்­றை­யாட்சி முறை­மை­யைப் பெய­ர­ள­வில் மட்­டு­மல்­லா­மல் உள்­ள­டக்­கத்­தி­லும் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.
ஒற்­றை­யாட்­சிக் கோட்­பாடு
ஒற்­றை­யாட்சி முறை என்­பது பிரிட்­ட­னில் உரு­வான ஒரு கோட்­பா­டா­கும். இது சட்­ட­வாக்­கல் அதி­கா­ரத்தை மட்­டும் மையப்­ப­டுத்­தி­ய­தா­கும். அதா­வது மத்­திய நாடா­ளு­மன்­றத்­துக்கு நிக­ரா­கச் சட்­டங்­களை ஆக்­கும் அதி­கா­ர­முள்ள வேறு நிறு­வ­னங்­கள் இருக்க முடி­யா ­தென்­பது அந்­தக் கோட்­பாட்­டின் அடித்­த­ள­மா­கும். எழு­தப்­ப­டாத அர­ச­மைப்­பைக் கொண்ட பிரிட்­டன் இன்­றைக்­கும் ஒற்­றை­யாட்­சி­யைக் கொண்­ட­தா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யி­ருந்தபோதி­லும் பிரிட்­ட­னில் இன்று இருக்­கும் அதி­கா­ரப் பகிர்­வின் விரி­வாக்­கம் எந்­தச் சமஷ்டி நாட்­டின் அதி­காரப் பகிர்­வுக்­கும் சளைத்­த­தல்ல.
1920ஆம் ஆண்­டில் அயர்­லாந்­தைத் தனி­நா­டா­கப் பிரித்­துக் கொடுத்த சட்­டத்­தி­லி­ருந்து 1998ஆம் ஆண்டு ஸ்கொட்­லாந்­துக்­குப் பிரிந்­து­செல்­லும் உரித்­தோடு அதி­கா­ரப்­ப­கிர்­வைக் கொடுத்த ஸ்கொட்­லாந்­துச் சட்­டம் வரைக்­கும், ஒற்­றை­யாட்­சி­யின் பிர­கா­ரம் பிரிட்­டன் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே நிறை­வேற்­றப்­பட்­ட­வை­யா­கும். கோட்­பாட்­ட­ள­வில் இந்­தச் சட்­டங்­க­ளைப் பிரிட்­டன் நாடா­ளு­மன்­றம் தன்­னிச்­சை­யாக நீக்­கம்­செய்­யும் தகை­மை­யைக் கொண்­டி­ருந்­தா­லும் கூட நடை­மு­றை­யில் அது எப்­போ­துமே சாத்­தி­ய­மற்­றது. ஆத­லால் பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி முறை­யைப் பிரிட்­டன் கொண்­டி­ருந்­தா­லும், நடை­மு­றை­யில் உல­கி­லுள்ள பெரும்­பா­லான சமஷ்டி ஆட்­சி­மு­றையை விடக் கூடு­த­லான சமஷ்­டிக் குணா­தி­ச­யங்­க­ ளைக் கொண்­ட­தா­கக் காணப்­ப­டு­கின்­றது.
ஆகவே பலர் கரு­து­வ­தைப் போல சமஷ்டி என்­பது ஒற்­றை­யாட்­சிக்கு நேரெ­தி­ரான ஆட்­சி­முறை என்­பதை விடப் பெய­ர­ள­வில் ஒற்­றை­யாட்சி நாடு­க­ளுக்­குள்­ளும் முழு­மை­யாக ஊடு­ரு­வக்­கூ­டி­யது. ஆகவே ‘இன்­றைய சமஷ்­டி­யின் விரி­வாக்­கத்­தைப்’ பற்றிப் பேசு­கி­ற­போது ஒரு குறு­கிய வட்­டத்­துக்­குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு முறை­மை­யாக அதை அணுக முடி­யாது.
சமஷ்டி
அமெ­ரிக்­கா­வின் அர­ச­மைப்­புச் சட்­ட­தில் சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் அமெ­ரிக்க அர­ச­மைப்­புச் சட்­டம் சமஷ்டிக் கட்­ட­மைப்­பி­லா­ன­தென்­ப­தில் எவ­ருக்­குமே சந்­தே­கம் கிடை­யாது.
பல நாடு­க­ளின் அர­ச­மைப்­புச் சட்­டங்­களை ஒப்­பீடு செய்­கின்ற தாமஸ் ஓ ஹூக்­லின்­னு ­டைய புத்­த­கத்­தில் கீழ்க் காணும் குறிப்­பு­க­ளை­யும் காண­லாம்.
ஸ்பெய்ன் நாட்­டி­னு­டைய அர­ச­மைப்­புச் சட்­டம் சமஷ்­டி­யென்று பெயர் குறிப்­பி­டப்­ப­ டாத போதி­லும் அதி­கா­ரப்­ப­கிர்வு அல­கு­க­ளின் சட்­ட­வாக்­கல் அதி­கா­ரத்தை மீறித் தேசிய அரசு சட்­டங்­கள் இயற்ற முடி­யாது.
அதே­போல் மத்­திய அரசு தன்­னிச்­சை­யாக அர­ச­மைப்­புச் சட்­டத்தை மாற்­ற­வும் முடி­யாது. இந்த இரண்டு கார­ணங்­க­ளின் நிமித்தம் ஸ்பெய்ன் நாடு பெய­ரில் தவிர மற்­றெல்­லா­வற்­றி­லும் சமஷ்டி நாடா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. மாறாக ஆஸ்­தி­ரியா நாட்­டின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் பெய­ர­ள­வில் சமஷ்டி முறை­யென்று என்று அழைக்­கப்­பட்­டா­லும் மத்­தி­யின் மேலா­திக்­கம் மிக­வும் கூடி­ய­தா­கக் காணப்­ப­டு­கின்­றது.
எமது அண்­டைய நாடான இந்­தி­யா­வின் அர­ச­மைப்­புச் சட்­டம் ஒற்­றை­யாட்சி என்றோ, சமஷ்டி என்றோ பெய­ரி­டப்­ப­டாத ஒன்று. இது முழு­மை­யான சமஷ்­டி­யும் அல்ல, முழு­மை­யான ஒற்­றை­யாட்­சி­யும் அல்­லாத இரண்­டும் கலந்த ஒரு முறைமை என்று கூறப்­ப­டு­கின்­றது.
இந்­திய அர­ச­மைப்­புச் சட்­டத்தை வரைந்த அர­சி­யல் நிர்­ணய சபை­யின் தலை­வர் அம்­பேத்­கார் ‘‘எமது அர­ச­மைப்­புச் சட்­டம் காலச் சூழ்­நி­லை­க­ளின் தேவைப்­பாட்­டுக்­க­மைய ஒற்­றை­யாட்­சி­யா­க­வும் சமஷ்­டி­யா­க­வும் இருக்­கக்­கூ­டி­யது’’ என்று கூறி­யி­ ருக்­கின்­றார்.
சமஷ்­டிக் குணா­தி­ச­யம்
2014ஆம் ஆண்டு இலங்­கைத் தமிழ் அரசு கட்­சி­யின் செய­லர் என்ற வகை­யில் மாவை.சேனா­தி­ரா­ஜா­வுக்கு எதி­ராக 6ஆம் அர­ச­மைப்­புத் திருத்­தத்­துக்கு அமை­வா­கத் தொட­ரப்­பட்ட வழக்­கொன்­றின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தலைமை நீதி­ய­ர­சர் உள்­ளிட்ட மூன்று நீதி­ய­ர­சர்­க­ளைக் கொண்ட உயர் நீதி­மன்­றக் குழா­மொன்­றால் வழங்­கப்­பட்­டது. பல நாடு­க­ளி­னு­டைய அர­ச­மைப்பு, பல சட்ட நிபு­ணர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் ஆராய்ந்து வழங்­கப்­பட்ட தீர்ப்­பிலே பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டி­ருக்­கின்­றது.
‘நாடு­களை ஒற்­றை­யாட்சி அல்­லது சமஷ்டி என்று பெய­ரி­டு­வது தவ­றான அர்த்­தத்­தைத் தரக்­கூ­டும். சில ஒற்­றை­யாட்சி நாடு­கள் சமஷ்டி குணா­தி­ச­யங்­க­ளோ­டும் சில சமஷ்டி நாடு­கள் சில ஒற்­றை­யாட்­சிக் குணா­தி­ச­யங்­க­ளோ­டும் காணப்­ப­ட­லாம். ஆகை­யால் இறைமை, அதி­கா­ரப் பகிர்வு மற்­றும் அதி­கா­ரப் பர­வ­லாக்­கம் என்­பவை ஓர் ஒற்­றை­யாட்சி அர­சுக்­குள் சமஷ்­டி­ மு­றை­யி­லான ஆட்­சி­மு­றையை ஏற்­ப­டுத்த வழி­வ­குக்­க­லாம்.’
‘சமஷ்டி’ என்று அழைக்­கப்­ப­டு­கின்ற அர­ச­மைப்­புச் சட்­டங்­க­ளைக் கொண்ட எல்லா நாடு­க­ளி­லே­யும் சில ‘ஒற்­றை­யாட்சி’ குணா­தி­ச­யங்­கள் காணப்­ப­டும். அந்த நாடு பிள­வு­ப­டா­மல் ஒரே நாடாக இருப்­ப­தற்­கான ஏற்­பா­டு­கள் தான் அந்த ஒற்­றை­யாட்­சிக் குணா­தி­ச­யங்­கள். அனால் இவற்­றைக் கார­ண­மா­கக் கொண்டு அது சமஷ்டி அல்­ல­வென்று கூறி­விட முடி­யாது.
இன்­றைய சமஷ்டி என்­பது வெறு­மனே பெய­ர­ள­வில் நின்­று­வி­டா­மல் எல்லா வகை­யான அர­ச­மைப்பு முறை­மை­க­ ளுக்­குள்­ளும் விரி­வாக்­கம் அடைந்­துள்­ளது. ஆகை­யால் சமஷ்­டி­யென்­பது வெறு­மனே பெய­ரால் மட்­டும் வர்­ணிக்­கப்­ப­டும் ஓர் ஆட்­சி­மு­றை­யாக இருக்­க­மு­டி­யாது. மாறாக ஒரு நாட்­டின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் உள்­ள­டக்­கத்தை ஆராய்­கின்ற போது சமஷ்­டி­யின் அடிப்­ப­டைக் குணா­தி­ச­யங்­கள் காணப்­ப­டு­மாக இருந்­தால், அதற்கு என்ன பெயர் கொடுத்­தா­லும், பெயரே கொடுக்­கா­விட்­டா­லும் அது சமஷ்டி ஆட்சி முறை­யா­கவே இருக்­கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.