பொங்கு தமிழ்....!

சங்கம் வளர்த்திட்ட
  சிங்கார தமிழே
எங்கும் ஒளிக்கின்ற
   எக்கால தமிழே!
பொங்கி வழிகின்ற
 பொற்காலத்தமிழே!
வள்ளுவன் இசைத்த
  வயலிசைத் தமிழே!

செந்தீயாய் ஒளிர்கின்ற
    தீயானத் தமிழே!
துக்கம் பகிர்கின்ற
   துய்யத் தமிழே!
இதயத்தில் இசைக்கின்ற
   இனிமைத்தமிழே!
புவிதனை ஆளும்
    பூபாளத்தமிழே!
அங்கம் சொரிந்தொழுகி என்
உயிர் உன் அடியினில் சரணம்மா

காற்றும் கடலும் கூட பொங்கலாம்
தீயும் மலையும் கூட பொங்கலாம்
அடுப்பில் வடிசோறு பொங்கலாம்
எம் தாயின் விழி பொங்கலாமா?
அதை பார்த்தும் நம் விழி மூடலாமா!

பொங்கி எழுவது என்பது
மறத்தமிழனுக்கு புதிதல்ல
அன்று சிங்களப் படையினம்
செருக்குடன் சீர செந்தீயாய்
பொங்கினோம்  .நம் இனம்
விழிகளில் செந்நீரை பொங்கினோம்!

தங்கையும் தாயுமாய் தணலில்
வேகும் வேளையிலே தாக்கிடும்
வேதனையில் தரிகெட்டு
பொங்கினோம்!
எம்  புண்களில் வேலினை
துளைக்கின்ற போதிலும்
மங்கிய ஒளியிலும் விம்மி அழுது
பொங்கினோம்!...

மகவோடு தாயும் மண்ணில்
மடியையிலே மார்பினில் அடித்து
மடியில் தாங்கி பொங்கினோம்..

சிங்களவனின் அராஜகத்தை அறுத்து
 நீ நிற்கும் பூமியில் நிம்மதி சேர்த்திட நெஞ்சமதில்  குண்டுகளை சுமந்தவரை அறிவீரோ!
பஞ்சணையும் இல்லாமல்  படுக்கையும்
இல்லாமல் வெஞ்சமர் மீதிலே
வீழ்ந்த கதை அறிவீரோ?

மண்ணில் மலர்கின்ற மழலையெல்லாம்
மகிழ்வோடு வாழ்ந்திட தன்னுயிரைச்
துச்சமாய்  துறந்தோரை  அறிவீரோ?
தமிழனுக்கென தனித்துவத்தை
தடம்பதித்து தாம் அழிந்தோரை அறிவீரோ?

மொழிகாக்க முயன்றோரை
முத்தமிழை காத்தோரை
அழியானோ தமிழனென்று
அழுதேங்கி நின்றோனை
தமிழ் காக்க வந்தோனை
நல்லோனை பெரியோனை
நயவஞ்சகம் கொண்டோனை
பார்மீது அறிவீரோ?

வஞ்சகம் கொண்டோனின்
வழிதனை பற்றி வல்லினமாகி
வலிமைதனை இழந்து வதைபடுவதும்
மறத்தமிழனுக்கு அழகாகுமோ?

குட்ட குட்ட குனிந்தது போதும் தமிழா
ஓர்மம் நெஞ்சில் கொண்டெழு
எத்திசை போகினும்
பொங்கும் எங்கள்  தமிழ்
எங்கும்  பொங்கும் எங்கள்  ஈழத்தமிழ்!

கவிப்பிரியை சுஜனி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.