தடை..!

தாயகம், தேசியம்,
மக்கள், மாவீரர்,
வியக்கும் கோரிக்கைகள்
ஒரு
காலத்தில்
உயிரைத் தொடும்
வார்த்தைகளாய்
வந்து வீழ்ந்தது.

இப்போதெல்லாம்
சாமக்கோழிகளின்
சங்கீதம்
சாளரம் வழியே
செவிகளை
அறைகிறது.

இனத்தின்
விடியலுக்காய்
அதியுச்ச தியாகத்தை
மெழுகுவர்த்தி போல்
ஒவ்வொரு நாளும்
உயிர் ஒழுகி
பன்னிருநாளாய்
நீராகாரமின்றி
தன்னையே உருக்கியவன்
மகத்தான நாளில்!

ஆட்டம் பாட்டம்
கொண்டம்!
மதுப்போத்தல்களின்
கூட்டம்!

எமக்காய் வீழ்ந்தவனுக்காய்
வணக்கம் செலுத்தமுடியாத
முயல்க்கொம்புகளாய்!
உணர்வுகள் வறுமையில் வீழ்ந்தாலும்!
அதியுச்ச அறம்செய்தவன் நாளில்!
மதுப்போத்தல்களுக்கு கொடுக்கும் மதிப்பு!
மாவீரர் வணக்கத்திற்கு
இல்லாமல் போனதே
வியப்பு!

திலீபண்ணா
நீ பாவமடா!
நன்றியில்லா
இனத்திற்காய்
மாண்டுபோனது
வீணடா?

நீ உருகிய மணித்துளி
ஒவ்வொன்றையும்
உணர்ந்தாலே
உயிர் வலிக்குதடா!
நீ உரைத்த வாய்மொழி
ஒவ்வொருநெஞ்சங்களையும்
உயிரை உருக்கி
எரிக்குதடா!

உனக்கு வீரவணக்கம்
செலுத்தி
உரிமைப்போருக்கு உரம்
ஏற்றிட
நிறம்மாறிய அதிகாரம்
தடுக்குதடா!

எதிரிகள் மட்டும் எங்கள்
இலக்கிற்கு தடையல்ல!
அரசியல் அடிவருடிகளும்
துரோகங்களுமே!
தியாகங்களை துளைக்கும்
துப்பாக்கி இரவைகள்!

உன்னைப்பற்றி வகுப்பெடுத்தோரே
உன்னை நினைப்பதில் கோட்டைவிட்டனர்!
Powered by Blogger.