இந்தியா - மொராக்கோ வர்த்தக ஒப்பந்தம்!

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் தீவிரமாக இணைந்து செயல்பட இந்தியாவும், மொராக்கோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இதுகுறித்து செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசு தரப்பு அறிவிப்பில், ‘சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் இணைந்து செயல்படுவதை விரிவுபடுத்தத் தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரவீந்திரநாத்தும், மொராக்கோ பி.எம்.இ. நிறுவனத்தின் பொது இயக்குநர் ரப்ரி பாரஸுவாவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும். இதனால் சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின்போது இரு நாடுகளிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளும் கொள்திறன்களை கட்டமைத்தல், அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை கூடுதல் செயலாளர் அல்கா அரோரா மற்றும் மொராக்கோ தொழில் துறை செயலாளர் அத்மான் எல் பெரடாஸ் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாடுகளும் 1999ஆம் ஆண்டு முதல் உரத் துறையில் ஒப்பந்தமிட்டு இணைந்து செயலாற்றி வருகின்றன. மொராக்கோவைச் சேர்ந்த சில நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடும் செய்துள்ளன. அதேபோல இந்தியாவும் மொராக்கோவுக்கு பருத்தி நூல், செயற்கை துணிகள், போக்குவரத்து சாதனங்கள், மருந்துப் பொருட்கள், ரசாயனங்கள், வேளாண் கருவிகள், மசாலா பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட உலோகங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.