ஹாலந்தின் சுழலில் சிக்கிய இந்தியா!

ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதும் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியிருந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய ஏ, முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் குவித்தது. 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸைத் துவக்கிய ஆஸ்திரேலியா 292 ரன்கள் குவித்தது.
262 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. அங்கித் பாவ்னே 25 ரன்கள் சேர்த்து இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ரவிகுமார் சமரத், 8 ரன்களில் ட்ராவிஸ் ஹெட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் ஜான் ஹாலந்தின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர், மயங்க் அகர்வால் மட்டும் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து 80 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 163 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜான் ஹாலந்து 81 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Powered by Blogger.