புலிகள் என கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் ஹெல உறுமய

யுத்தம் என்ற போர்வையில் தனிப்பட்ட தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் எதிராக துரிதமாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பிரிவினைவாத பயங்கரவாத செயற்பாடுகளை போர் ரீதியாக தோற்கடிக்கப்பட்ட அடுத்த வருடம் மே மாதத்துடன் 10 ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளது.

எனினும் இந்த பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சில சட்ட ரீதியான பிரச்சினைகள், சமூக ரீதியான பிரச்சினைகள், சர்வதேச பிரச்சினைகள் மற்றும் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் ஒன்றோடு ஒன்று சிக்கி, சிக்கலாக முன்னோக்கி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தம்மை பயங்கரவாதிகளாக ஏற்றுக்கொண்டு, ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய, ஆயுதங்களை கையளித்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்கி விடுவித்தது.

மேலும் பல விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சுமார் 60 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.

இதனை தவிர கடந்த காலம் முழுவதும் போருடன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராகவும் அவ்வப்போது வழக்குகள் தொடரப்பட்டடு, தண்டனை வழங்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. போருடன் சம்பந்தப்படாத தனிப்பட்ட குற்றச் செயல்களும் நடந்துள்ளன.

ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையானது பாதுகாப்பு தரப்பினர், சமூகம் மற்றும் சர்வதேச ரீதியில் ஒரு குழப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை பார்க்க முடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் நாம் சரியான கொள்கைகளை பின்பற்றாத காரணத்தினால், குறிப்பாக சர்வதேச அமைப்புகள் நாம் சட்டத்தை சரியாக அமுல்படுத்தவில்லை என்று கூறுகின்றன. இதனை நாம் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு சுயாதீனமாக சட்டத்தை அமுல்படுத்தினால் என்னவாகும்.

தம்மை புலிகள் என்று ஏற்றுக்கொண்டு, புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் சட்டமூலங்கள் கொண்டு வரப்படவில்லை என்பதுடன் மகிந்த ராஜபக்ச, அமைச்சரவையின் அனுமதியையும் பெறவில்லை. இதனால், அவர்கள் அனைவரையும் மீண்டும் கைதுசெய்ய நேரிடும். விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என்பதே இதற்கு காரணம்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையிலும் சர்வதேசத்திலும் தடைசெய்யப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் சரணடைந்த நிலையில், எந்த சட்ட பின்னணியும் இல்லாது விடுதலை செய்யப்பட்டால், சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை என்றால், விடுதலை செய்யப்பட்ட அந்த 12 ஆயிரம் பேரை மீண்டும் கைதுசெய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

முக்கியமாக விடுதலைப் புலிகளின் உயர் மட்ட தலைவர்களாக இருந்த, ராம், நகுலன், கே.பி போன்றோர் தற்போது சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.

அண்மையகாலமாக சிற்சில சம்பவங்கள் காரணமாக சிலர் கைதுசெய்யப்படுகின்றனர். எனினும் இவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. சட்டம் அனைவரும் சமமான முறையில் அமுல்படுத்தப்படுகிறது என்றால், அதேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும். எனினும் செயற்பாட்டு ரீதியாக தற்போது அப்படி நடப்பதில்லை.

அதேபோல் சில வெளிநாடுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.

எனினும் படையினருக்கு தண்டனை வழங்குமாறு கூறுகின்றனர். காணாமல் போனோரின் அமைப்பு போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்துகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், படையினருக்கு தண்டனை வழங்குமாறு கோருகின்றனர்.

அதேநேரத்தில் படையினர் வேட்டையாடப்படுவதாக கூறுகின்றனர். எந்த வகையிலும் சட்டத்தை அமுல்படுத்த முடியாது. தனிப்பட்ட குற்றச் செயல்களுக்காக படையினரை கைதுசெய்ய முடியாது என்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் மிகவும் மடத்தனமான செயல்கள்.

இந்த பிரச்சினைகளை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இந்த பிரச்சினைகள் காரணமாக இன்னும் பல தசாப்தங்களுக்கு எம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் போராட்டம் மட்டுமே நடக்கவில்லை. மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டமும் நாட்டில் நடந்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் இந்த போராட்டமும் பயங்கரவாத செயல்களே. இறுதியில் என்ன நடந்தது. இந்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் உயிரிழந்தனர். சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

போராட்டத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை போல் மக்கள் விடுதலை முன்னணியினரும் உயிருடன் சுதந்திரமாக இருக்கின்றனர். உத்தியோகபூர்வமற்ற ஒருவகையிலான பொது மன்னிப்பை மக்கள் விடுதலை முன்னணியினர் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் ரோஹன விஜேவீரவின் மனைவி சித்ராங்கனி விஜேவீர தனது கணவர் சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்டார் என்று முதல் காலத்தில் நீதின்றத்திற்கு சென்று வழக்கு தொடரவில்லை. இந்த கொலையை நேரில் பார்த்த மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பிரதிநிதிகள் இருந்தனர்.

எனினும் முதலில் மக்கள் விடுதலை முன்னணியினர் அப்படி வழக்கு எதனையும் தொடரவில்லை. இதன் மூலம் அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு வகையில் பொது மன்னிப்பை வழங்கியுள்ளதை இது காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியும் தாம் செய்த தவறை ஏற்றுக்கொண்டது போல் அது ஆகிவிட்டது.

தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி மட்டுமல்ல, இடதுசாரி அமைப்புகள், பலர் ஆயுதங்களை ஏந்தினர். கருடன் (உகுஸ்ஸா) போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு கொலை செய்தனர். அவர்களும் சுதந்திரமாக இருக்கின்றனர். சிலர் இறந்து போயினர்.

பலர் அரசியலில் முக்கியமான அதிகாரமிக்க இடங்களில் இருக்கின்றனர். இவர்கள் சம்பந்தமாகவும் சட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கும் ஒரு வகையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாம் மக்கள் விடுதலை முன்னணியை மறந்து விட்டோம். அந்த முன்னணி ஜனநாயக வழிக்கு திரும்பி விட்டது.

பழைய காரணங்களுக்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

இதனை போலவே தென் ஆபிரிக்காவில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு மூலம் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது. அண்மையில் கொலம்பியாவின் பேர்க் கெரில்லா அமைப்பு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியது.

அரசாங்கம் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கியது. பேர்க் அமைப்பு உலகில் எஞ்சியிருந்த இஸ்லாமிய அமைப்பு அல்லாத ஒரே ஒரு ஆயுதப் போராட்ட அமைப்பு.

இதனால், ஜனாதிபதி, பிரதமர், அரசியல் கட்சிகள், தேசிய மற்றும் சர்வதே ரீதியில் இந்த விடயங்கள் தொடர்பில் அக்கறை காட்டும் மனித உரிமை அமைப்புகளுக்கு நாம் சில யோசனைகளை முன்வைக்க விரும்புகிறோம்.

பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும், தோற்கடிக்க முடியும் என நாம் கூறும் போது, சிலர் காலில் பலம் இல்லாதவர்கள் போல் செயற்பட்டனர். நாங்கள் மட்டுமே பலமாக கால்களை ஊன்றி போராட்டம் நடத்தினோம்.

எனினும் இந்த பிரச்சினையை நீடித்த ஒரு பிரச்சினையாக இருந்தால்,ஆறாத புண்ணாகவே இருக்கும். இதன் மூலம் சமூகத்திற்கு எந்த நன்மையான முன்னேற்றமும் கிடைக்க போவதில்லை.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு தரப்பினருக்கு உதவி போன்ற குற்றச்சாட்டில் தமிழ் அமைப்புகளை சேர்ந்த சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள அனைவரினதும் குற்றங்களை தரம்பிரிக்க வேண்டும். இதில் போர் செயற்பாடுகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் அந்த குற்றத்தை செய்தனர் என்பதை கண்டறிய வேண்டும். தனிப்பட்ட தேவையை நிறைவேற்ற செய்தார்களா, கப்பம் பெற செய்தார்களா, அச்சுறுத்த செய்தார்களா என்று அறிய குற்றங்களை தரம் பிரிக்க வேண்டும்.

போரை அடிப்படையாக கொண்டு இலங்கை பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள், படையினருடன் இணைந்து செயற்பட்ட தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

அதேபோல், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தமது தனிப்பட்ட தேவைக்காக அல்லாமல் போர் நோக்கத்திற்காக குற்றங்களை செய்திருந்தால், அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள்.

விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரத்து 600 பேருக்கும் மேலானவர்கள், பெரிய குற்றங்களை செய்தவர்கள் வெளியில் இருக்கின்றனர் என்பதே இதற்கு காரணம். சிலர் அமைதியான வாழ்ந்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் தசாப்த காலங்களாக தடுத்து வைத்திருப்பதில்லை பிரயோசனம் இல்லை. இவர்களையும் பாதுகாப்பு தரப்பினருடன் விடுதலை செய்ய வேண்டும்.

அதேவளை தனிப்பட்ட நோக்கத்திற்காக எவராவது பிள்ளைகளை கடத்திச் சென்றிருந்தால், கொலைகளை செய்திருந்தால், பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தால் அல்லது வேறு குற்றங்களை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தும் பிரச்சினையை அடுத்து முடித்துக்கொள்ள வேண்டும். இவற்றின் பின்னால் தொடர்ந்தும் சென்றுக்கொண்டிருப்பதில் பயனில்லை.

இப்படியான தேசிய பொது மன்னிப்பை வழங்க முழு நாடும் ஒன்றாக இணைய வேண்டிய நேரமிது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, தமிழ்,முஸ்லிம் கட்சிகள், தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சினையை தீர்க்க இந்த இணக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் அந்த பிரச்சினையை பற்றி பேசக் கூடாது. தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புகள் இந்த போரில் நடந்ததாக கூறப்படும் சம்பவங்கள் குறித்து பேசுவதை முற்றாக மறந்து விட்டு, எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

அதனை விடுத்து, இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சினைகளை பற்றி பேசினால், விடுதலை மற்றும் அதனுடான செயற்பாடுகளுக்கு எந்த பிரயோசனமும் ஏற்படாது. தேசிய பொது மன்னிப்பை வழங்கி, 100 பேருக்கும் குறைவான போருடன் சம்பந்தப்பட்ட இவர்கள்

ஜனநாயகத்துடன் கலக்க இடமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயம் சம்பந்தமாக முக்கியத்துவத்தை வழங்கி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்த பின்னர் நாட்டின் எதிர்காலத்திற்கான பயணத்தை உருவாக்கி இருக்க முடியும். போருக்கு பின்னரும் இவ்வாறான அரசியல் ரீதியான பயணத்தை முன்னெடுக்க சந்தர்ப்பம் இருந்தது. அவை கைவிட்டு போயின.

தற்போது கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வெளிப்படையாக செயற்பாடுகள் மூலம் ஒவ்வொருவரும் தமது தவறுகளை உணர்ந்து, மன்னிப்பு கேட்டு, மன்னித்து, கடந்த கால சம்பவங்கள் மூலமான பாடங்களை கற்று, இறந்த காலத்தை மன்னித்து எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம் என நாம் முழு நாட்டுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் யோசனைகளை முன்வைக்கின்றோம் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

#sampikka ranavaka   #srilanka  #tamilnews 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.