ஜெ.வுக்கு முக்கியத்துவம் குறைகிறது- சசிகலா டென்ஷன்!

“பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்க இன்று தினகரன் வந்திருந்தார். அவரோடு, இளவரசி மகன் விவேக் , விவேக் மனைவி கீர்த்தனா இளவரசியின் மருமகன் ராஜராஜன் ஆகியோரும் வந்திருந்தனர். வழக்கமாக தினகரன் சிறைக்குள் போவதும் சில சமயங்களில் தினகரனை பார்க்காமல் சசிகலா திருப்பி அனுப்புவதுமான சம்பவங்களும் அரங்கேறியது.

இந்த முறை சசிகலாவே சொல்லி அனுப்பித்தான் தினகரன் பெங்களூரு போயிருக்கிறார். யாரெல்லாம் வர வேண்டும் என்பதையும் சசிகலாவே முன்கூட்டியே சொல்லியிருக்கிறார். இந்த முறை குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பார்த்த சசிகலா, வழக்கறிஞர்கள் கூட யாரும் வர வேண்டாம் என சொல்லிவிட்டாராம். அப்படி என்னதான் பேசினார் சசிகலா என விசாரித்தோம்.

ஜெயா டிவியின் தலைமை நிர்வாகப் பொறுப்பை தற்போது கவனித்து வருவது தினகரன் மனைவி அனுராதா. இளவரசி மகன் விவேக் ஜெயா டிவி அலுவலகம் வந்து போனாலும், அத்தனையும் அனுராதா கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதையும் மீறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் செய்திப் பிரிவுக்கு முக்கியமான ஒருவரை பணியமர்த்தினார் விவேக். இது அனுராதா கவனத்துக்கு வராமலேயே நடக்க... அந்த புதிய நபரை வேலையில் இருந்தே அனுப்ப வேண்டும் என அனுராதா தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை இளவரசி மூலமாக சசிகலா கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார் விவேக். அதன் பிறகுதான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பெங்களூரு வரச் சொல்லி இருக்கிறார் சசிகலா.

தினகரனிடம் ரொம்பவே டென்ஷனுடன் தான் பேசினாராம் சசிகலா. 'அனுராதாவையும் ஆபீஸ்க்கு வர அனுமதிக்கச் சொல்லி நீங்க கேட்டதாலதான் வரச் சொன்னேன். அதுக்காக டிவியை நான் உங்ககிட்டயே ஒப்படைச்சுடல. விவேக்குக்கு முடிவெடுக்க எல்லா அதிகாரமும் இருக்கு. அவரு எடுத்த ஆளை வேண்டாம்னு சொல்றது... அவரை அவமதிக்கிறதெல்லாம் இனி செய்யாதீங்க.

விவேக்கின் மனைவி கீர்த்தனா படிப்பை முடிச்சுட்டாங்க. இனி அவங்களும் ஆபீஸ் வரட்டும். இந்தப் பொண்ணும் புத்திசாலி பொண்ணு என்பது எனக்கு தெரியும். அதுக்காக நான் அனுராதாவை வர வேண்டாம்னு சொல்லவில்லை. வரட்டும்... இவங்க எல்லோரு கூடவும் பேசி எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கட்டும்.

நான் உள்ளே இருக்கிறதால டிவி பார்க்கிறது இல்லைன்னு நினைக்காதீங்க. இங்கே இருந்தாலும் நான் நம்ம டிவி பார்க்கிறேன். எனக்கு டிவி பார்க்க அனுமதி கொடுத்திருக்காங்க. டிவியில அக்காவுக்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைஞ்சிட்டே வருது. அவங்க கொடுத்ததுதான் இது எல்லாமே... அதை மறந்துடாதீங்க... உங்க புகழ் பாடுற டிவியாதான் இப்போ இருக்கு. அக்காவை எடப்பாடி கொண்டாடுற அளவுக்குக்கூட நீங்க கொண்டாடுவது இல்ல. உங்களுக்கு அவங்க முக்கியம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு எல்லாமே அவங்கதான். அவங்களால்தான் இந்த வாழ்க்கை. இதை நான் என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.அதுக்கு இடையூறு வர மாதிரி யாராவது நடந்துக்கிட்டா நான் கேட்பேன்...' என்று சொன்னாராம். அதுமட்டுமல்லாமல், 'கீர்த்தனா நீ உடனே ஆபீஸ்க்கு போக ஆரம்பிச்சுடு. அதுல எதாவது சிக்கல் இருந்தால் எனக்கு உடனடியாக தகவல் சொல்லு..' என்று சொல்ல... தினகரன் அமைதியாகவே இருந்தாராம். இப்படியான குடும்ப பஞ்சாயத்து தான் உள்ளே பேசப்பட்டிருக்கிறது." என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

"சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன் என்ன சொன்னார்?" என்று கேள்வியை கமெண்ட்டில் போட்டது வாட்ஸ் அப். பதிலை ரிப்ளைஸில் போட்டது ஃபேஸ்புக்.

“குடும்ப பஞ்சாயத்து நடந்தது என்றா சொல்வார்? 'சசிகலாவிற்கு உடல்நலம் சரியில்லை என வரும் செய்தி வதந்தி. அவர் நலமாக இருக்கிறார்' என்றவர், 'முதல்வரில் இருந்து துணைமுதல்வர் வரை அனைவரும் என்னை பற்றியே பேசிவருகின்றனர். திமுக குறித்து கூட பேசுவது இல்லை என்னை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் கனவில் கூட நான்தான் தெரிகிறேன். சதி செய்து முதல்வர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. நடக்கிற ஆட்சியில் எல்லோரும் காமெடியன் ஆகிவிட்டார்கள். நடிகர் வடிவேலு நடிப்பது இல்லை என்ற குறையை ஆட்சியாளர்கள் தீர்த்துவைக்கிறார்கள்.' என்று பேசிவிட்டுக் கிளம்பினார் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.