பிக் பாஸ் ஒரு பித்தலாட்டம் : சினேகன்

“பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர்களுக்குத் தேவையானது மட்டும்தான் ஒளிபரப்புகிறார்கள். உள்ளே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது” என்று, நேற்று (செப்டம்பர் 4) சென்னையில் நடந்த ‘பேய் எல்லாம் பாவம்’
திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் சினேகன் கூறியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் தமிழ் படம் ‘பேய் எல்லாம் பாவம்’. ஹீரோ அரசு, அப்புக்குட்டி மட்டுமே தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். படத்துக்கு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் சங்கர் இசை அமைத்துள்ளார். தீபக் நாராயணன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள், பேரரசு, ஏ.வெங்கடேஷ், ராசி அழகப்பன், ஜாகுவார் தங்கம், பிக் பாஸ் ஸ்நேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர் ராசி அழகப்பன் பேசும் போது," பேய்க்கும் எனக்கும் நீண்ட கால தொடர்பு உண்டு. பேயை நம்பினோர் கைவிடப் படார். ஊரைவிட்டு வெளியே போய்க்கூட பிழைத்துக் கொள்ளலாம். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ஹாலிவுட் இயக்குநர் மனோஜ் நைட் ஷ்யாமளன். பாண்டிச்சேரியில் இருந்து அமெரிக்கா போய் சுமார் 15 பேய் படங்களை எடுத்துவிட்டார். நான் அவரை சமீபத்தில் பார்க்கும் போது கூட கிளாஸ் எனும் பேய் படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் வரும் பேயோடு குடும்பம் நடத்தலாம் போல் இருக்கிறது. இந்தப் பேய் நன்றாக டான்ஸ் ஆடுகிறது, லிப்ஸ்டிக் போடுகிறது, சூப்பராக பேசுகிறது. வியாபார ரீதியாகப் பார்த்தால், பேய் படங்களில் போடப்படும் பணத்தில் 75 சதவீதம் உறுதியாக திரும்பக் கிடைத்துவிடும். எனவே மனிதனை நம்பி படம் எடுப்பதைவிடப் பேயை நம்பி படம் எடுத்துவிடலாம்", என அவர் கூறினார்.
கவிஞர் சினேகன் பேசுகையில், “எல்லோரும் ஒரு அடையாளத்திற்காகத்தான் அலைந்து கொண்டிருக்கிறோம். 2500 பாடல்கள் எழுதும் போது கிடைக்காத அடையாளம் ஒரு நூறு நாள் உள்ள வைத்துச் செய்தார்கள் அப்போது கிடைக்கிறது. அவர்கள் இஸ்டத்திற்கு செய்தார்கள், அவங்களுக்குத் தேவையானது மட்டும்தான் போட்டார்கள். உள்ள என்ன நடந்தது என்பது தெரியாது. டிஆர்பி, அது ஒரு வியாபார களம். எதற்காக சொல்கிறேன் என்றால், இந்தக் குழு மொழி தெரியாமல், ஏக்கமும் தடுமாற்றமும் அவர்களுக்குள் இருந்தாலும் இங்கு நம்மை நம்பி வந்திருக்கிறார்கள்.
கேரளத்துச் சகோதரன் ஒருவன் கேரள வெள்ளம் சமயத்தில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி அனுப்பியிருந்தான். ‘தமிழகத்தை நாங்கள் எப்போதும் மதிப்பதில்லை. ஏன் என்றால் இவர்கள் படிக்காதவர்கள், கல்வியறிவில்லாதவர்கள், முரட்டுத்தனமுள்ளவர்கள், நாகரீகம் தெரியாதவர்கள் என்று விமர்சித்திருக்கிறோம். அதிகப்படி பாண்டி, பட்டி என்று சொல்லியிருக்கிறோம். உங்களுக்கு விபத்து வந்தபோதும், இயற்கை சீரழிவு வந்த போதுகூட நாங்கள் உதவியதில்லை. ஆனால் இந்த வெள்ளத்தின் போது கேரளா தலைகீழாக தண்ணீரில் மிதந்த சமயத்தில் முதலாளாக உதவியவர்கள், உதவிக் கொண்டிருப்பவர்கள் தமிழர்கள்’ என்று பகிர்ந்திருந்தான்.
யாருக்கு அடித்தாலும் தமிழனுக்கு வலிக்கும். ஆனால் தமிழுக்கு அடித்தால் தான் யாருக்கும் வலிக்க மாட்டீங்கிறது. எங்கிருந்தாலும் இந்தியனுக்கு எதாவது ஒன்றென்றால் முதலில் கை நீட்டி ஓடுகிறவன் தமிழன். ஆனால் தமிழனுக்கு ஒன்றென்றால் எந்த இந்தியனும் வரமாட்டீங்கிறான் என்ற வருத்தம் இருக்கிறது. எவ்வளவு அடித்தாலும் வாங்கிக் கொள்கிறோம், அதைத் தாங்கி கொள்கிறோம். மொழி தெரியாது என்று வராதீர்கள். கலைஞர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் நீங்கள் எல்லாம் சகோதரர்களாக மாறிவிட்டீர்கள். இது உங்கள் பூமி, உங்கள் களம்” என்றார்.

No comments

Powered by Blogger.