கேரளாவிற்கு மதிமுக, மார்க்சிஸ்ட் நிவாரணம்!

கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக மதிமுக சார்பில் 20 இலட்சம் மதிப்பிலான பொருட்களையும், 10லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் பொறுப்பு வகிக்கும் தொழில் துறை அமைச்சர் ஜெயராஜனிடன் வைகோ இன்று வழங்கினார்.
கேரளாவின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுவருகிறது. இந்த நிலையில் மதிமுக சார்பில் நெல்லையிலிருந்து வேனில் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவும் உடன் சென்றிருந்தார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் தொழில் துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜனை, கேரள தலைமைச் செயலகத்தில் இன்று (செப்டம்பர் 5) சந்திந்த வைகோ, வெள்ள நிவாரணமாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 20 இலட்சம் மதிப்புள்ள 15 டன் அரிசி, வேட்டிகள், துணிகள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களை ஐந்து லாரிகள், இரண்டு டிரக்குகளில் கொண்டுசென்று திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்வில் கேரள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் உடனிருந்தார்.
இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில் கேரள வெள்ள நிவாரணமாக மூன்றாவது தவணையாக 65 லட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் தமிழக நிர்வாகிகள் கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜனிடன் இன்று நேரில் வழங்கினர். இதுவரை கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் சார்பில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாராட்டப்பட்ட வைகோவின் செயல்
தொண்டர்களோடு இணக்கமான உறவைக் கடைபிடிக்கும் வைகோ, தமிழகத்திலிருந்து மதிமுக சார்பில் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்களை லாரிகளிலிருந்து அக்கட்சியினர் இறக்கி வைத்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடன் இணைந்து தானும் பொருட்களை இறக்கிவைக்கும் பணியினைச் செய்தார். இந்த சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறது. சீமைக் கருவேல மரங்களை தமிழ்நாடு முழுதும் வேரோடு வெட்டித் தள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், வைகோ தானே களமிறங்கி அரிவாளால் சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.