ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் அக்டோபர் மாதம் 25ம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ப.சிதம்பரத்துக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.


 இதைத்தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.கே.பதக், ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது ஐஎன்எக்ஸ்.‌ மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட த‌டையை அடுத்த மாதம் 25ம் தேதி‌வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  

No comments

Powered by Blogger.