மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை!

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான நீதியை இலங்கை அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்ட 22 ஆவது நினைவு தினம் நேற்று யாழ். செம்மணி பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக் கையில்:

பாடசாலை மாணவி கிருஷாந்தி மட்டுமல்ல, அவரைப் போன்று பலர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். யுத்தத்துடன் எந்தவித சம்பந்தமும் இல்லாத கிருஷாந்தி மட்டுமன்றி பலர் கொல்லப்பட்டமை எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.

இவ்வாறான கொலைகளுக்கு இந்நாட்டில் நிச்சயமாக நியாயம் கிடைக்காது. சர்வதேச ரீதியான பங்களிப்புடன் நீதியான விசாரணை இடம்பெற்றால் மட்டுமே அனைத்துக் கொலை களும் வெளியில் கொண்டு வரப்பட்டு எமது சமூகத்துக்கு நியாயம் கிடைக்கும். இவ்வாறான கொலைகளுக்கு நியாயம் கோரியே, இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்வுகளில் சிறு தொகையினர் பங்கு பற்றுவதனால், நியாயம் கிடைக்காமல் போகலாமெனச் சிலர் நினைக் கலாம். சிறு அளவிலான மக்களின் போராட்டமே ஐக்கிய நாடுகள் வரை சென்று நீதியைக் கோரி நிற்கின்றது. சர்வதேச நீதி விசாரணை வரும் வரையில் எமது போராட்டங்களில் இருந்து ஓயமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.