வரலாற்று துரோகத்தை இந்திய தேசம் கட்டவீழ்த்து விட்டது!

தேச விடுதலைக்கான இளையோர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி என்பது சொல்லில் அடங்காதவை. விடுதலை எனும் தாகம் தியாகம் எனும் பெரும் இருப்பை தனதாக்கிக் கொண்டது.

அகிம்சையை போதித்த இந்திய தேசம் எம்மிடம் ஆயுதத்தையும் தந்து சகோதர யுத்தத்திலும் ஈடுபட வைத்ததுடன் அமைதி காக்கும் படையென இங்கு செய்த அட்டூழியங்களை நாம் எளிதில் மறந்து விடவோ மன்னித்து விடவோ மாட்டோம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 31வது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் வரலாற்று துரோகத்தை இந்திய தேசம் கட்டவீழ்த்து விட்டது. அதன் எதிரொலியே தியாகி திலிபனின் அகிம்சைப் போராட்டம் அகிம்சா தேசத்தையே வியக்க வைத்தது.

யுத்தம் முடிவுற்று ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. மேற்கத்தேய கலாசார மோகமும், தென்னிந்திய சினிமாவும் இணையப் பயன்பாடும் சமூக ஊடகங்களும் எமது இளையோரை திசைமாற்றுகின்றது.

சிந்தனை பிறழ்வை ஏற்படுத்தி தவறான வழிநோக்கி திசைமாற்றுகின்றது. இவ்வாறான சூழ்நிலையை எதிரி இலாபகரமாக மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் ஊக்குவித்து வருகிறனர்.

ஆகவே எமது இளையோருக்கு போராட்ட வரலாற்றின் சாதனை நாயகர்களின் உண்மை வரலாற்றை எடுத்தியம்ப வேண்டியது எமது ஒவ்வொருவரிலும் வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் ஆகும்.

ஏனெனில் சமூக ஊடகங்களின் தாக்கத்தால் பொய்யான திரிவு படுத்தல் தகவல்கள் அதிகம் இளையோருக்கு சென்றடைகின்றது. இது தடுக்கப்பட வேண்டும்.

ஈழ விடுதலையின் போராட்ட வடுக்களையும் எமது இலக்கு நோக்கிய இடைவிடாத இலட்சியப் பயணத்தின் வரலாற்று தடத்தையும் எளிதில் எவரும் அழித்துவிட இடமளித்துவிட முடியாது.

தேசம் பறிபோய்விட்டாலும் தேசியத்தை நாம் இழக்க முடியாது. விடுதலை வீரர்களின் வரலாறு எமது இளையோரை வழிகாட்ட நாம் வழிவகுக்க வேண்டும்.

நாம் வீழ்ந்துவிட்டவர்கள் அல்ல அல்லது சார்ந்து சோர்ந்து போய்விடக்கூடியவர்கள் அல்ல என்பதை எம்முடைய எதிரிகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஆகவே தமிழ்த்தேசம் தன்னிலை அடையும் வரை தியாக வேள்வி அணைந்துவிடப் போவதில்லை மாறாக அடக்குமுறையும் ஏகாதிபத்தியமும் எமது விடுதலை பற்றிய தாகத்தை தூண்டும்.

எனவே இளையோர்கள் எமது போராட்ட வரலாறுகளை தேடிப்படியுங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் எமது எதிரிகளுக்கு அடிப்பணியாதவர்களாய் உங்கள் மனோவலிமையை திடப்படுத்திக் கொள்ளுங்கள். அதுவே அடுத்த வரலாற்று கடத்தலுக்கு வாய்ப்பாக அமையும்.

எனவே உங்கள் எண்ணங்களை தின்னங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் இளையோர்களே நாளைய வரலாறு உங்களிடமே தேங்கிக் கிடக்கப் போகிறது. உங்களை நீங்களே தயார்ப்படுத்திக் கொள்வதே மரணித்த விடுதலை வீரர்களுக்குச் செய்யும் பெரும் அருஞ்செயலாகும்.

விடுதலைக்கான அரசியலுக்கு தன்னை ஆகுதியாக்கிய திலீபனை தேர்தல் அரசியல் ஆதாயச் சூதாடிகள் தேசியம் என்னும் போர்வையில் அகப்படுத்த முனைவது இழி நிலைச் செயலாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#sivakaran    #mannar  #tamilnews   #thileeepan

No comments

Powered by Blogger.