மருத்துவமனையில் விஜயகாந்த் :மகன் உருக்கம்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக அவதிப்பட்டு வருகிறார். நேற்றிரவு (ஆகஸ்ட் 31) திடீரென சென்னை மணப்பாக்கத்தில் உள்ள 'மியாட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவின.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவரது மகன் விஜய் பிரபாகரன் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலை மோசமாக இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அவர் ராஜா மாதிரி இருக்கிறார். அவர் உண்மையாகவே கவலைக்கிடமாக இருந்தால் நான் அங்குதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேலை விஷயமாக நெல்லூர் வந்திருக்கிறேன். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்பது உண்மைதான் ஆனால், படுத்தப் படுக்கையாக இருக்கிறார் என்று கூறுவது ஒரு மகனாக எனக்கு வேதனை அளிக்கிறது. இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதனால் உங்களுக்கு என்ன பயன்” என்று கேள்வி எழுப்பினார்.

“அவர் விரைவில் குணமடைந்து வருவார். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல கேப்டன் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக வருவார். என் உயிரே போனாலும் அது நடக்கும். அவருக்கு ஒன்றும் ஆகாது தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம். ஒவ்வொருவருக்கும் என வேலை, கடமை இருக்கிறது. அதைப் பாருங்கள். அவர் நிச்சயம் திரும்ப வருவார்” என்று கூறி விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.