‘ஜே’ சொல்ல ஆளில்லாத ‘அண்ணனுக்கு ஜே’!

தமிழ் சினிமாவில் நேரடியாகப் படத்தயாரிப்பில் ஈடுபடாமல் பிரபல நிறுவனங்கள் மூலமாக முதல் பிரதி அடிப்படையில் படங்களை தயாரிப்பதற்கு முதலீடு செய்வது ஹாலிவுட் நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டாரின் வாடிக்கை. அப்படித் தயாரிக்கப்பட்ட படம் தான் அண்ணனுக்கு ஜே. தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக அறியப்படும் வெற்றிமாறன் இப்படத்தின் தயாரிப்பாளர்.

அட்டகத்தி தினேஷ், ராதாரவி மற்றும் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படம் நேற்று (ஆகஸ்ட் 31) ரிலீஸ் செய்யப்பட்டது. அண்ணனுக்கு ஜே படம் அறிவிக்கப்பட்டபோது இது ஒரு சமகால அரசியல் படமாக பரபரப்பாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. வெற்றிமாறன் தயாரிப்பு என்பதால் தமிழ்சினிமாவில் முக்கிய படமாகவும், தமிழக அரசியலைப் பேசுவதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்ப் படத் தயாரிப்பில் சொந்த பணத்தில் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்போது கதையிலும், தயாரிப்பு செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தப்படும். பிற நிறுவனங்கள் முதலீட்டில் முதல் பிரதி அடிப்படையில் படத்தை தயாரித்துத் தருபவர்கள் இதுபோன்ற கவனம் செலுத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக அண்ணனுக்கு ஜே படத்தை கோடம்பாக்க வியாபாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

படத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்வதற்கான எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் நேற்று காலை வெளியான இப்படத்திற்குத் தியேட்டர்களில் ஓப்பனிங் எங்கும் இல்லை. படம் திரையிடப்பட்ட எந்தத் தியேட்டரிலும் ஒரு காட்சிக்கு 100 டிக்கெட்டுகள்கூட விற்பனை ஆகாமல் அண்ணனுக்கு ஜே அடக்கமாகவே காட்சிகள் நடைபெற்றது. ஃபாக்ஸ் ஸ்டார் எதிர்பார்த்தபடி படம் இல்லாததால் ‘எம் புள்ளையும் பள்ளிக்கூடம் போறான் கணக்காக’ அண்ணனுக்கு ஜே கணக்கை முடிக்க படத்தை ரிலீஸ் செய்ததாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர் வெற்றிமாறனுக்கும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திற்கும் இணக்கமான உறவு இல்லாததால் பத்திரிகையாளர்களுக்குக்கூட அண்ணனுக்கு ஜே படம் திரையிட்டு காண்பிக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் இப்படத்திற்கான முதல் நாள் மொத்த வசூல் சுமார் ரூ. 50 லட்சம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.