கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து உதவி மறுக்கப்படுகிறது-யோகேஸ்வரன்!

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்றவர்களில் ஒரு சிலரே தமது சொந்த பிரதேசங்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், பெரும்பாலானோரது உதவி மறுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பண்டாரியாவெளி அறிவாலயம் அமைப்பின் அனுசரணையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புலம்பெயர்ந்து வாழ்கின்ற வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மட்டக்களப்பு மக்களுக்கு பல வகையான உதவிகளைச் செய்கின்றார்கள்.

ஆனால் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்த ஒருசிலரே தமது பிரதேசத்திற்கான உதவிகளை செய்து வருகின்றனர்.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தைப் பொறுத்தவரை பல தேவைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி போதாமல் உள்ளதுடன் பாடசாலைகளுக்கு பொருள் கொள்வனவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூடாது எனவும் சுற்றுநிருபம் அனுப்பியுள்ளார்கள். இதனால் எங்களால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது.

சட்டம், விஞ்ஞானம் மற்றும் கணிதத்துறைகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் அவர்களின் பல்கலைக்கழக கல்விக்கு முடிந்தவரை உதவுவதற்கு தயாராக உள்ளேன். கலை மற்றும் வர்த்தகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட வறிய நிலையிலுள்ள மாணவர்களும் தொடர்பு கொண்டால் அவர்களின் கல்விக்காகவும் உதவுவதற்கு தயாராக உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.