நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி!

அதிகார மோகத்தால், நாட்டில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்தவே மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் முயற்சித்து வருகின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தொிவித்த அவர், “செப்டம்பர் 5ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது, வழங்கப்பட்ட பால் பெக்கட்டில் விஷம் கலந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுவும் என்மீது தான் எதிரணியினர் நேரடியாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

நான் பின்பற்றும் மதம் மட்டுமன்றி, எல்லா மதங்களிலும் மனித நேயத்துக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறானதொரு பாவமான செயற்பாட்டில் நான் எப்போதும் ஈடுபட்டதே கிடையாது.

நான் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே மஹிந்த தரப்பினர் இவ்வாறான குற்றச்சாட்டை என்மீது சுமத்துகிறார்கள்.

எப்படியாவது அதிகாரத்துக்கு வந்துவிட வேண்டும் என்பதற்காக, நாட்டில் சிங்கள- முஸ்லிம் இனங்களுக்கிடையில் தேவையில்லாமல் மோதலை ஏற்படுத்தவே இவர்கள் தற்போது முயற்சித்து வருகிறார்கள்.

பால் பெக்கட்டில் விஷம் கலந்துள்ளதாக இவர்கள் கூறும் குற்றச்சாட்டை மூளையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இது தொடர்பிலான, இரசாயனப் பரிசோதனைக்கு இத்தரப்பினரால் வழங்கப்பட்ட பால் பெக்கட்டைக் கொண்டுதான் விசாரணைகளும் நடத்தப்பட்டன. அதன்படி பாலில் விஷம் கலக்கப்படவில்லை எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் முதலில் தம்மை தாமே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டுவிட்டு, தற்போது உத்தமர்கள் போன்று இவர்கள் கதைப்பதில் எந்தப் பயனும் இல்லை.

உண்மையில், அரசாங்கத்தைக் கவிழ்ப்போம் என்று இவர்கள் நடத்திய போராட்டம் படுதோல்வியடைந்தமையால், இதனை மறைப்பதற்காகவே இவ்வறான கீழ்த்தரமான பிரசாரங்களில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்விடயத்தில் அவர்கள் நேரடியாக என்மீது குற்றம் சுமத்தியக் காரணத்தினால், நான் தற்போது அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவும் ஆலோசனைகளை மேற்கொண்டுவருகிறேன். பொலிஸாரும் இந்த விடயத்தை துரித கதியில் விசாரிப்பார்கள் என்றே எதிர்ப்பார்க்கிறேன்” எனத் தொிவித்தார்.

No comments

Powered by Blogger.