நல்லாட்சியின் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்: கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாவிடின், நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று (புதன்கிழமை) சந்தித்தார்.

அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசியல் கைதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருகின்றனர்.

அதுமாத்திரமின்றி அவர்களில் சிலர் ஆறு, ஏழு வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்ப்போம்.

என்னுடைய இந்த நிலைப்பாட்டிலேயே எனது கட்சியும் செயற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மகசின் சிறைச்சாலையிலுள்ள 44 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.