வருமான வரித் துறை நோட்டீஸ்: தயாநிதி மனு தள்ளுபடி!

தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்களுக்கு எதிராக வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம் தயாநிதி மாறன் உள்ளிட்டோரின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
2008- 2009, 2009- 2010 ஆகிய ஆண்டுகளுக்கான தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித் துறை தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் “ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மறு ஆய்வு கோரி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித் துறைக்கு அதிகாரம் இல்லை. தற்போதைய நிலையில், வருமான வரித் தாக்கலை மறு ஆய்வு செய்ய ஏன் நோட்டீஸ் அனுப்பினார்கள் என்று நான் எழுதிய கடிதத்திற்கு முறையாக வருமான வரித்துறை பதில் அளிக்கவில்லை.
விதிகளுக்கு முரணாக கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிபிஐ சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வருமான வரித் துறை இந்த நோட்டீஸை அனுப்பிள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள தயாநிதி, அதன் அடிப்படையில் வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கான காரணத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் அளிக்க மறுத்துவிட்டதாகவும் சன் டைரக்ட் நிறுவனம் தன்னுடைய சகோதரர் நிறுவனம் எனவும் அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த விதத்திலும் பொருளாதார ரீதியாக அல்லது நிதித் தொடர்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.
“ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் சன் டைரக்ட் நிறுவனம், கலாநிதி மாறன், பிரியா மாறன் ஆகியோருக்கும் எனக்கும் (தயாநிதி மாறன்) வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது . குற்றப்பத்திரிக்கை அடிப்படையில் வரித் துறை நோட்டீஸ் அனுப்ப முடியாது. அதே போன்று எனக்கு சன் டைரக்ட் நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக அல்லது நிதித் தொடர்புகள் இருந்தன என்பதற்கான எந்த விதமான ஆதாரத்தையும் வருமான வரித் துறை தாக்கல் செய்யவில்லை எனவே 2 நிதியாண்டுக்கு வருமான வரி மறு ஆய்வுக்கு, வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் இன்று (அக்டோபர் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரித் துறையின் சார்பில் அனுப்பப்படும் நோட்டீஸ்களுக்கு ஆரம்ப நிலையில் உயர் நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் இதற்காக வருமான வரி மேல் முறையீட்டு அமைப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். “ மனுதாரர் முதலில் அங்குதான் நாடி இருக்க வேண்டும். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை. ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து பல வழிகளில் இந்தியாவிற்குச் சட்ட விரோதமாக நிதி வந்துள்ளதாகவும் இதற்காக சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அரசின் அனுமதி பெற்றிருந்தாலும் அப்போது மனுதாரர் (தயாநிதி மாறன்) அமைச்சராக இருந்தார் எனவே அவருடைய தலையீடு மற்றும் அதிகாரத்தால் நடந்துள்ளது என சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை மறுப்பதாக இருந்தால் மனுதாரர் சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை விடுத்து ஆரம்ப நிலையில் உயர் நீதிமன்றத்தை நாட முடியாது எனவும் எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், “சம்பந்தப்பட்டவர்களின் வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்வதற்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதில் ஆரம்ப நிலையிலேயே நீதிமன்றம் தலையிட முடியாது. அவ்வாறு தலையிட வேண்டும் என்றால் அதற்கான சரியான காரணங்கள் தேவை” என தெரிவித்தார்.
மேலும், “ஒரு குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி பெறும்பொழுது அந்த குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் உயர் பதவியில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக உயர் பதவியில் உள்ளவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித் துறை விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.தொழில்நுட்ப ரீதியாக நாடு வளர்ச்சி அடையும்பொழுது அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழல் நடைபெறுவதாகவும் தொழில்நுட்ப ரீதியாகப் பணப் பரிமாற்றம் செய்யும்போதும் பலர் அரசை ஏமாற்றுகிறார்கள்” எனத் தெரிவித்த நீதிபதி சுப்பிரமணியம், இது போன்ற ஊழல்கள் நாட்டைப் புற்று நோய்போல் அழித்து விட்டதாகவும் இதனை நீதிமன்றங்கள் ஊக்குவிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
“இந்த வழக்கில் மறு விசாரணை செய்வதற்கு வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது அரசின் உயர் பதவிகளில் இருந்த நபர்கள் அவர்களுக்கு எதிராக அரசுத் துறைகள் நோட்டீஸ் அனுப்பும் பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்த நீதிபதி, வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் அதற்கான முகாந்திரம் இந்த வழக்கில் இல்லை எனத் தெரிவித்து தயாநிதி மாறனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதேபோன்று சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனம் மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு வருமான வரித் துறையின் சார்பில் அனுப்பப்பட்ட மறு ஆய்வு நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.