களத்தை மாற்றிய ஐஸ்வர்யா!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் செக்கச்சிவந்த வானம் வெளியாகி திரையரங்கில் ஓடிவருகிறது. நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த அப்படத்தில்
ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் சில இடங்களில் மட்டும் தோன்றினாலும் ஈழத் தமிழ்ப் பெண்ணாக நடித்து கவனம் ஈர்த்திருந்தார். தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வரும்நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகத் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.

தமிழில் பிஸியாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்திலும் இந்தியிலும் ஒவ்வொரு படங்கள் மட்டும் நடித்துள்ளார். தெலுங்கில் அவருக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்த போதும் வலுவான திரைக்கதையை எதிர்பார்த்த அவர் அந்த வாய்ப்புகளைத் தவிர்த்துவந்தார். தற்போது க்ரந்தி மாதவ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார்.

வழக்கமான கதாநாயகி கதாபாத்திரமாக அல்லாமல் நடிப்பதற்குச் சவாலான வித்தியாசமான கதாபாத்திரம் ஐஸ்வர்யாவுக்கு தரப்பட்டுள்ளது. நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா தமிழில் நேரடியாகக் களமிறங்கியுள்ளதால் இங்கும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா என நாயகிகளும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர்களாக இருப்பதால் தமிழிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஐஸ்வர்யா ஜனவரி மாதம் படக்குழுவுடன் இணையவுள்ளார். 

No comments

Powered by Blogger.