துப்பாக்கிச் சுடுதலில் முதல் தங்கம்!

இளையோர் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது.
அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில், அக்டோபர் 6ஆம் தேதி முதல் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற ஜூடோ போட்டியில் இந்தியாவின் மணிப்பூரைச் சேர்ந்த 16 வயதான தாபாபி தேவி 44 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து நேற்று (அக்டோபர் 9) நடந்த 62 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 15 வயதான ஜெரிமி லால்ரின்னங்கா ஸ்னாட்ச்சில் 124 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க்கில் 150 கிலோவும் என மொத்தமாக 274 கிலோ எடையைத் தூக்கி சாதனை படைத்து தங்கம் வென்றார். இந்தத் தங்கமானது இளையோர் ஒலிம்பிக்கில் அவருக்குக் கிடைக்கும் முதல் தங்கமாக மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே முதல் தங்கமாக அமைந்தது.
இந்நிலையில் இத்தொடரில் நேற்று நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த 16 வயதான மனு பாக்கரும் கலந்துகொண்டார். அதில் தனக்கு கொடுக்கப்பட்ட சுற்றுகளை நேர்த்தியாகக் கையாண்ட மனு பாக்கர் இறுதிச் சுற்றில் 8பேரை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக விளையாடி236.5 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைப் பெற்று தங்கம் வென்றார்.
ஏற்கெனவே, உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் மற்றும் காமன்வெல்த் தொடர்களில் தங்கம் வென்றுள்ள மனி பாரிக்கர் இளையோர் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வாங்குவது இதுவே முதல் முறை. அத்துடன் இளையோர் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பெறும் முதல் தங்கமாகவும் இது பதிவாகியுள்ளது.
இரண்டாமிடம் பெற்ற ரஷிய வீராங்கனை இயானா எனினா 235.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மூன்றாமிடம் பெற்ற ஜார்ஜியா வீராங்கனை நினோ குட்சிபெரிட்ஸ் (214.6 புள்ளி) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

No comments

Powered by Blogger.