விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சமீப காலங்களாக நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களில் அவரது சினிமா வசனங்களும் கதைக்கருவும் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணமாகவே இருந்து வருகின்றன. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தொட்டும் தொடாமல் அரசியல் குறித்து பேசினார். இத்தகைய பேச்சு அவரின் வருங்கால அரசியல் வருகையைக் காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்தனர். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு குட்டி கதையை விஜய் கூறியிருந்தார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு, புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? மக்களால் உயர்த்தி விடப்பட்டவர் மக்களுக்காக பணியாற்ற வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகின்றனர். என்னை ஆன்மிகத்தில் ஈடுபட வைத்தவர் சத்குரு ஜக்கி வாசுதேவ்தான். பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன்” என்றார்.
கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என கூறினார். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர், முன்ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.