விடுதலைத் தாகம் தணியாது என்பதன் சாட்சியாகவே தாயகத்தில் தொடரும் நடைப்பயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தாயகத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் நடைப்பயணத்திற்கு யேர்மன் வாழ் தமிழ் மக்கள் சார்பாகவும் குறிப்பாக இளையோர்கள் சார்பாகவும் எமது தோழமையை  தெரிவிப்பதுடன், இப் போராட்டம் வெற்றிபெற நாம் மாணவர்களுடன் தொடர்ந்து உணர்வால் பயணிப்போம் என்பதையும் உறுதியளிக்கின்றோம்.

பல வருடங்களாக சிங்கள பேரினவாத அரசின் சிறையில் பல சித்திரவதைகளுக்கு மத்தியில் வாடும் எமது உறவுகள்  உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் , குறிப்பாக அவர்களில் சிலர்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுவதால் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதற்கு எதிராகவும் நீதிக்கான விடுதலை நடைப்பயணத்தை இளையோர்கள் வலுப்படுத்தி முன்னெடுக்கின்றார்கள்.யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் , கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்திருப்பது , அவர்கள் ஒரு தேசமாக தமது சிந்தனையை அடையாளப்படுத்தி இணைந்து போராடுவதை வெளிப்படுத்துகின்றது.


புலம்பெயர் தேசங்களிலும் தாயக மக்களின்  விடுதலையை  நோக்கியும் தமிழின அழிப்புக்கு நீதிகோரியும்   தொடர்ச்சியாக வெகுயன போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.  தாயகத்தில் நடைபெறும்  போராட்டங்களை சர்வதேச நாடுகளுக்கு வெளிப்படுத்தும் வகையில் அவைகள்  பற்றிய தகவல்களையும் ஆவணங்களையும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைப்பது போன்று , இவ் விடுதலை நடைப்பயணத்தை பற்றிய செய்திகளையும், தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனும் மனுவையும்   அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் ஒருங்கிணைப்பில் அனைத்து நாடுகளின்  வெளிவிவகார அமைச்சுகளுக்கும் பல்லின மனிதவுரிமை  அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்பதை இத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.

 துருக்கி நாட்டில் மனிதவுரிமைக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணி திருமதி Eren Keskin அவர்களுக்கு எதிராக துருக்கி அரசாங்கம் முன்வைக்கும் பொய்க்குற்றச்சாட்டு  தொடர்பாக பொது மன்னிப்புச்சபையால் யேர்மன் தலைநகரில் ஒழுங்குசெய்யப்பட்ட  கலந்துரையாடலில் இலங்கையிலும் இவ்வாறான சர்வாதிகார அரசியல் நிலைமையால் எத்தனையோ மனிதவுரிமையாளர்களும் , தமிழ் இளையோர்களும்     சிறையில் பல வருடங்களாக வாடுகின்றனர் என்பதை இவ் நிகழ்வில் கலந்துகொண்ட யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை உறுப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் மாணவ சமூகம் தமிழர் விடுதலையை நோக்கி முன்னெடுக்கும் அனைத்துவகை போராட்டங்களுக்கும் புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஆகிய நாம் தொடர்ச்சியாக எமது ஆதரவையும் அனைத்துவகை  ஒத்துழைப்பையும் வழங்குவோம் என இத்துடன்  உறுதியளிக்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

No comments

Powered by Blogger.