ஆட்ட நாயகன், தொடர் நாயகன் : உமேஷ், பிருத்வி மகிழ்ச்சி

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக பிருத்வி ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி சாதனைப்படைத்துள்ளது. இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் 127 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சுருண்டது. இதனை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 1 விக்கெட் கூட பறிகொடுக்காமல் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்க்ஸ் இரண்டையும் சேர்த்து உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோன்று முதல் டெஸ்ட் போட்டியில் 134 (154), இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 70 (53) மற்றும் 33 (45) ரன்கள் குவித்த பிருத்வி ஷா தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.