தூத்துக்குடி துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் புதிய சாதனை!

இந்தியத் துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இரண்டு சரக்குப் பெட்டக தளம் உட்பட 14 கப்பல் தளத்துடன் செயல்பட்டு வருகிறது. கையாளுதல், நிலக்கரி இறக்குமதி ஆகியவற்றில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
தமிழகத்தின் நுழைவு வாயிலாம் இத்துறைமுகத்தில் சரக்குத்தளம் ஆழப்படுத்தப்பட்ட பிறகு பெரிய நீளாமான கப்பல்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இத்துறைமுகத்தில் 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய கப்பல்களும் கையாள துவங்கப்பட்டுள்ளது.


இந்த துறைமுகத்திற்கு முதன்முறையாக 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட எம்.வி.ஜேன் ஜீன் (M.V. Zheng Jun) என்ற கப்பல் கையாளப்பட்டது. ’பனாமாக்ஸ்’ வகை சரக்கு கப்பல், 229 மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலம் மற்றும் 43,951 டன் எடையும் உடையது. இந்தோனேஷியாவில் உள்ள ’சாமரிண்டா’ என்ற துறைமுகத்தில் இருந்து 74,962 டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு இறக்குமதி செய்வதற்காக தூத்துக்குடி துறைமுகத்திற்கு இன்று மாலை வந்தடைந்தது. இந்தக் கப்பலை வரவேற்கும் விதமாக கப்பல் கேப்டனுக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக துனைத் தலைவர் வையாபுரி, கப்பல் மாலுமிகளுக்கு இனிப்புகள் மற்றும் நினைவுப் பரிசினை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய துனைத் தலைவர் வையாபுரி, “ துறைமுகத்தில் கப்பல் நிறுத்தும் தளம் சமீபத்தில் ஆழப்படுத்தப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் 14 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல் கையாளப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதன் முதலாக பெரிய கப்பல் கையாளப்பட்டது. தூத்துக்குடியில் இயங்கி வரும் என்.எல்.சி., தமிழ்நாடு அனல் மின் நிலையத்திற்காக நிலக்கரியை ஏற்றி வந்துள்ளது. இனி தொடர்ந்து, இதுபோன்ற 14 மீட்டர் வரை ஆழம் கொண்ட கப்பல்கள் தொடர்ந்து கையாளப்படும். நிலக்கரி மட்டுமில்லாமல், பிற சரக்குகளும் இறக்குமதி செய்யப்படும். இதுபோன்ற வசதிகளால் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து அதிகரிப்பதுடன், குறைந்த செலவில் இறக்குமதி, ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

இதனைத் தொடர்ந்து, ரூ.400 கோடி செலவில் கப்பல் தளத்தின் ஆழத்தை 14.5 மீட்டராக ஆழப்படுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அது முடிவடைந்த பின்னர், துறைமுகத்தின் மிதவை ஆழத்தை வரும் 2021-ம் ஆண்டு 16 மீட்டராக உயர்த்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி சென்னை  ஐ.ஐ.டி., நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.” என்றார்.  இதற்கு முன்பு கடந்த 20.06.18 அன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலைக்கு 60,500 டன் டான் பாஸ்பேட் சரக்கினை 13.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட எம்.வி. டயோனியஸ் என்ற கப்பலை இத்துறைமுகம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#thoothukudi   #v.o.chidambaranar   #port trustthoothukudi  #தூத்துக்குடி  #ship

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.