மலையகத்தின் பல பகுதியிலும் வலுக்கும் ஆர்ப்பாட்டம்!

அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க கோரி மலையகமெங்கும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவந்த நிலையில், பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
அந்தவகையில், லிந்துலை – எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தரக் கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இன்று மதியம் மெராயா – தலவாக்கலை பிரதான வீதியில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மக்கள் மெராயா நகரத்தில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் இவ்வீதியினூடான போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது.
தோட்ட முதலாளிமாருக்கு எதிரான, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதோடு, பதாதைகளையும் ஏந்தி நகரத்தில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
இதன்போது, “கம்பனிகாரர்களுக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்” என கோஷம் எழுப்பின மக்கள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்த விடயத்தில் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து, இன்றைய தினம், மெராயா நகர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.