மாற்றுத் திறனாளிகளை மதிக்காத அமைச்சர்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பேச வேண்டிய விஷயங்களைக் கூட பேசாமல் இருந்த அமைச்சர்கள், அவரது மறைவுக்குப் பிறகு பேசக் கூடாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என விமர்சனங்கள் எழுகின்றன.

அண்மையில், அதிமுக அரசைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுப்பேன் என்று பேசினார் விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு.

இன்று (அக்டோபர் 16) நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம்பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கமலின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணிக் குழந்தை’’ என்று விமர்சனம் செய்திருக்கிறார். இது மாற்றுத் திறனாளிகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி, “மாற்றுத் திறனாளிகளின் வலிகளையும், வேதனைகளையும் நாங்கள் அருகில் இருந்து உணர்ந்தவர்கள், உணர்ந்துகொண்டிருப்பவர்கள். தற்போதெல்லாம் பெரும்பாலான அரசியல்வாதிகள் பொது மேடைகளில் பேசும்போது தங்களின் அநாகரீக அரசியல் பேச்சின் தாகத்தை தணித்துக்கொள்ள மாற்றுத் திறனாளிகளை உதாரணமாகக் காட்டிப் பேசிவருவதும், அவ்வாறு பேசிய பிறகு மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசியிருந்தால் வருந்துகிறேன் என அறிக்கையை வெளியிட்டு விடுவதையுமே வாடிக்கையாகக் கொள்வது அதிகரித்துவருகிறது.

மாற்றுத் திறனாளிகள் என்றால் அரசியல்வாதிகளுக்கெல்லாம் கிள்ளுக் கீரையாகத் தெரிகிறது போலும். கருவில் இருக்கும் குழந்தை உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாலும்கூட அக்குழந்தையின் கருவைக் கலைக்க சட்டம் அனுமதிக்காதபோது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருப்பது பொறுப்பான அமைச்சருக்கு அழகல்ல. அவர் அமைச்சர் பதவியில் தொடரச் சற்றும் அருகதையற்றவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் பொன்னுசாமி, “இனி மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் எவர் பேசினாலும் அவர்களை மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பகத்தில் குறைந்தது ஒரு மாத காலம் தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்வதோடு அவர்கள் படும் வலிகளையும், வேதனைகளையும் ஒருசேர அனுபவிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும் வகையில் பேசிய தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மாற்றுத் திறனாளிகளின் காப்பகத்தில் குறைந்தபட்சம் ஒரு மாத காலம் தங்கியிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்ய உத்தரவிட வேண்டும்” என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.