தினகரனுடன் நெருக்கத்தில் இருந்த சிவசங்கரி!

“திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னணித் தகவல்கள் இன்று காலை பதிப்பில் மின்னம்பலத்தில் படித்தேன். அந்த சூடு அடங்குவதற்குள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் சிவசங்கரி. அவரை இன்று அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி இருக்கிறார் தினகரன்.
அதிமுகவில் இருந்து தினகரன் பிரிந்ததில் இருந்தே தினகரனுக்காக உருகி உருகி பேசிக் கொண்டிருந்தவர் சிவசங்கரி. எடப்பாடியையும், பன்னீரையும் வறுத்தெடுத்ததில் சிவசங்கரிக்கு மிக முக்கிய பங்கு உண்டு. தினகரனின் சில வழக்குகளையும் கவனித்து வந்தார். அந்த அளவுக்கு தினகரனுடன் நெருக்கத்தில் இருந்த சிவசங்கரியைத்தான் இன்று கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார் தினகரன். என்ன காரணம் என தினகரன் கட்சி வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘நேற்று தொலைக்காட்சி ஒன்றில் சபரிமலை விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தது. முழுக்க பெண்களே பங்கேற்ற விவாத நிகழ்ச்சி அது. சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன தப்பு என ஒரு தரப்பும், போனால் என்ன ஆகும் என இன்னொரு தரப்பும் பேசினார்கள். இதில் தினகரன் அணியில் இருக்கும் சிவசங்கரியும் பங்கேற்று பேசினார். சபரிமலைக்கு பெண்கள் போனால் என்ன தப்பு என்பதுதான் சிவசங்கரியின் கருத்து. அதை முன்வைத்து விவாதத்தில் வெளுத்து வாங்கினார். விவாத நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே சிவசங்கரிக்கு தினகரன் வீட்டில் இருந்து போன் வந்திருக்கிறது. ஆனால், லைவ் நிகழ்ச்சியில் இருந்ததால் சிவசங்கரி போனை எடுக்கவில்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகு சிவசங்கரி பேசியிருக்கிறார். அவரோடு போனில் பேசியவர் பிரபு என்பவர். இவர் தினகரனுக்கு பங்காளி முறை உறவினராம். தற்போது தினகரனுக்கு உதவியாளராகவும் இருக்கிறார்.
’சபரிமலை விஷயத்துல கட்சியோட நிலைப்பாடு என்ன... டிடிவி அண்ணனோட நிலைப்பாடு என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? இதுவரைக்கு சபரிமலை பத்தி அண்னன் எந்தப் பேட்டியும், அறிக்கையும் கொடுத்ததே இல்லை. அப்படி இருக்க நீங்க எப்படி பெண்கள் சபரிமலைக்கு போகலாம்னு பேசினீங்க? அண்ணன் கேட்க சொன்னாரு...’ என்று கேட்டாராம் அந்த பிரபு. அதற்கு சிவசங்கரியோ, ‘நான் கட்சியோட கருத்தாக பேசலை. வழக்கறிஞர் என்ற முறையில்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஆதரவாக பேசினேன்..’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், பிரபு அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். ‘சபரிமலைக்கு பெண்கள் போக கூடாது. ஆகமவிதிகளை மீறக் கூடாது என்பதுதான் அண்ணன் கருத்து. அதை சொன்னால் சிக்கல் வரும்னுதான் அண்ணன் அமைதியா இருக்காரு. நீங்க எதுக்காக எங்களை கேட்காமல் விவாதத்தில் போய் இப்படி பேசினீங்க... ‘ என்று சொல்ல... ‘எல்லாத்துக்கும் உங்ககிட்ட சொல்லிட்டுதான் போகணுமா? சுதந்திரமா எதுவும் பேசக் கூடாதா? அடிமை கட்சியா நடத்துறீங்க?’ என எகிறியிருக்கிறார் சிவசங்கரி. இதையெல்லாம் தனது போனில் ரெக்கார்டு செய்து அப்படியே தினகரனுக்கு அனுப்பியிருக்கிறார் பிரபு. அதன் பிறகுதான் சிவசங்கரியை கட்சியில் இருந்தே நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் தினகரன்.
சிவசங்கரியை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பு வந்த அடுத்த நிமிடமே அவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். ‘அந்த ஆளு யாரையும் வளரவிடவே மாட்டாரு. நீங்க அந்த ஆளுக்காக எப்படி மூச்சு முட்ட கத்திட்டு இருந்தீங்க. உங்களை ஒரு நிமிஷத்துல தூக்கிப் போட்டுட்டாரு. அது மரியாதை இல்லாத இடம். இன்னும் கொஞ்ச நாள்ல பாருங்க அவரும் அவரோட பொண்டாட்டியும் மட்டும்தான் அந்த கட்சியில் இருப்பாங்க. நீங்க வெளியே வந்தது நல்ல விஷயம்தான். இங்கே வாங்க. உங்களுக்கு என்ன பதவி வேணுமோ எடுத்துக்கோங்க...’ என்று பேசியிருக்கிறார். அத்துடன், ‘நீங்க உடனே பிரஸ் மீட் வெச்சு, தினகரன் என்னவெல்லாம் செஞ்சாருன்னு மக்களுக்கு சொல்லிடுங்க. இல்லைன்னா நீங்க ஏதோ தப்பு பண்ணிய மாதிரி ஆகிடும். நம்ம ஆளுங்க சென்னையில் இருக்காங்க. அவங்ககிட்ட சொல்லி பிரஸ்மீட்க்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்.’ என்று சொன்னாராம்.
அதற்கு சிவசங்கரி, ‘நீங்க பேசினது சந்தோஷம் சார். சின்னம்மா குடும்பத்துல இருந்து ஒருத்தர் இவ்வளவு அக்கறையா பேசுறதே சந்தோஷமா இருக்கு. நிச்சயமா பிரஸ் மீட் வெச்சு அவரோட முகத்திரையை கிழிப்பேன். ஒரு விஷயத்துல எந்த கருத்தும் இல்லாமல் இருக்கிறவன் முட்டாள். கருத்து சொல்லப்பயப்படுறவன் எதுக்கு கட்சி நடத்தணும்...’ என்று போனிலேயே பொங்கிவிட்டாராம். விரைவில் சிவசங்கரி பிரஸ்மீட் இருக்கிறதாம். அதில், தினகரனைப் பற்றி பல தகவல்கள் வெளி வரப் போகிறதாம். அதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறதாம்.
இன்னொரு பக்கம், ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும் சிவசங்கரிக்கு தூது விடப்பட்டு இருக்கிறது. ‘நீங்க அதிமுகவுக்கு வாங்க என்று கூப்பிடல. ஆனால் அவரை சும்மா விடாதீங்க...’ என்று சொன்னாராம் அமைச்சர் ஒருவர். ஆக, எப்படி இருந்தாலும் தினகரனுக்கு எதிராக சிவசங்கரியை பேச வைக்க எடப்பாடி அணியும், திவாகரன் அணியும் கைகோர்த்துவிட்டது.” என்று முடிந்தது மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு இன்னொரு மெசேஜை டைப் செய்தது ஃபேஸ்புக்.
“குஜராத்தில் பிரம்மாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மோடியின் கனவுத் திட்டமான இந்த சிலை நனவானதை மத்திய அரசும் குஜராத் பாஜக அரசும் இணைந்து பெரும்விழாவாகக் கொண்டாட இருக்கின்றன. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து நேரடியாக அழைப்பதற்காக குஜராத் மாநில சுற்றுலா அமைச்சர் கண்பத் சின்ஹா தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.
அவர்கள் தமிழகம் வருவது பற்றி தமிழக பாஜகவுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டும், தமிழக பாஜக நிர்வாகிகள் அவர்களை எட்டிக் கூட பார்க்கவில்லையாம். தமிழகம் வந்த அவர்கள் தமிழக அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்தித்தனர். பின் சென்னையில் நேற்று மாலை ஒரு நிகழ்விலும் கலந்துகொண்டனர். அதில் தமிழக பாஜகவினர் பங்கேற்றனர். குஜராத் திரும்பிய குழுவினர், ‘பட்டேல் சிலை என்ற விஷயத்தை தமிழக மக்களிடம் அரசியல் ரீதியாக எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு தமிழக பாஜகவினர் எந்த ஒரு ஒத்துழைப்பும் தரவில்லை. இப்படியெல்லாம் இருந்தால் தமிழகத்தில் கட்சி எப்படி வளரும்?’ என்று தேசியத் தலைமையிடம் புகார் கூறியுள்ளார்களாம்” 
Powered by Blogger.