அமிதாப்பை ‘ஆட்டுவித்த’ பிரபுதேவா

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தில் பிரபுதேவா நடனமமைத்துள்ள பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.
தூம்- 3 பட புகழ் இயக்குநரான விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’.‘கன்ஃபெஸன்ஸ் ஆஃப் எ தக்’ எனும் 1839ஆம் ஆண்டு நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம் எபிக் ஆக்‌ஷன் அட்வஞ்சர் வகை சினிமாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆமிர் கானுடன் இணைந்து பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன், கேத்ரினா கைஃப், 'தங்கல்' பட புகழ் ஃபாத்திமா சனா சாயிக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் 3டி மற்றும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளரான மனுஷ் நந்தன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
யாஷ் ராஜ் ஃபில்ம்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள், மேக்கிங் வீடியோக்கள் மற்றும் புரொமோக்கள் சமீபத்தில் வெளியாகிக் கவனம் பெற்ற நிலையில் இப்படத்திலிருந்து ‘வஷ்மல்லே’ எனும் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அஜய்-அதுல் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை சுக்விந்தர் சிங் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அமிதாப் பட்டாச்சார்யா இதை எழுதியுள்ளார்.
அமிதாப் பச்சனும், ஆமிர் கானும் நடனமாடும் இந்தப் பாடலை தனது வித்தியாசமான நடன அமைப்பில் உருவாக்கியுள்ளார் நடன இயக்குநரான பிரபுதேவா. குறிப்பாக பாடலில் அமிதாப்பின் நடனம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
இப்பட ரிலீஸின்போது தமிழ் வரிகளுடன் இப்பாடல் வெளிவரும் பட்சத்தில் தியேட்டர்களில் பெரிய அளவிலான கவனத்தை இப்பாடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.