கட்சிகளிடம் செல்லவில்லை, மக்களை நோக்கிச் செல்கிறேன்!

தான் கட்சிகளை நோக்கிச் செல்லவில்லை என்றும் மக்களை நோக்கிச் செல்வதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்திலுள்ள சாய்ராம் கல்லூரியில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பெண்கள் பாதுகாப்பிற்காக ரவுத்திரம் என்னும் சிறப்பு செயலியை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.

அங்கு பேசிய கமல்ஹாசன், “நடு இரவில் பெண் தனியே தைரியமாக நடக்க வேண்டும் என்ற காந்தியின் கனவு இன்னும் பலிக்கவில்லை என்பது சோகம்தான். ஆனால் பலிக்கும் என்ற நம்பிக்கையில் இங்கு அமர்ந்துள்ளோம். ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் காண்பித்த கண்ணியம் என்றென்றும் மறக்கப்படாது. இந்த கண்ணியத்தை அடிக்கடி காட்ட வேண்டும். அன்று கண்ணகி எடுத்த சிலம்பம் வேறு. இன்று மாணவிகள் ஆடிய சிலம்பம் வேறு. பெண்கள் தற்காப்புக்குத் தடி எடுக்க வைக்காமல் நாம் நம்முடைய சொந்தமாக அவர்களை பார்க்க வேண்டும். இந்த ரவுத்திரம் செயலி ஆபத்துகால உதவிதான். இந்தச் செயலி நீண்ட காலம் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவதை விட எதிர்காலத்தில் இந்தச் செயலி தேவையில்லாமல் போகும் அளவுக்குச் சமுதாயம் மாற வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” என்று குறிப்பிட்டார்.

விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “காங்கிரஸுடன் கூட்டணி என்று சொல்லவில்லை. பார்ப்போம் என்றுதான் கூறினேன். எங்கள் தனித்துவத்தை மாற்றியமைக்கும் எந்தக் கட்சியுடனும் எங்களுக்குத் தொடர்பில்லை. ஊழல் நிறைந்தவர்களுடனும் எங்களுக்குத் தொடர்பில்லை. மத்தியில் ஆட்சி உள்ளவர்கள் இல்லாமல் அனைத்தையும் செய்துவிட முடியாது. கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் வரவில்லை” என்று தெரிவித்தார்.

மநீமவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில், திராவிடக் கட்சிகள் உங்களை அங்கீகரிக்க மறுக்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “நான் கட்சிகளை நோக்கிச் செல்லவில்லை. மக்களை நோக்கிச் செல்கிறேன். கட்சிகளை நோக்கிச் செல்வதாக இருந்தால் கட்சியே ஆரம்பித்திருக்க மாட்டேன். மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகக் கருதுகிறேன். கட்சிகளின் அங்கீகாரத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை. அங்குள்ள பெரியவர்கள், தாங்கள் இருந்தபோது எனக்கு அனைத்து மரியாதையையும் கொடுத்துள்ளனர். இன்றைக்கு இருப்பவர்கள் தர மறுத்தால், அது அவர்களுடைய பெருந்தன்மையின்மையைக் காட்டுகிறது” என்று பதிலளித்தார்.

“போராட்டம் என்பது கனமான வார்த்தை. அதனை கவனமாக கையாள வேண்டும். சட்ட ரீதியான பல போராட்டங்கள் உள்ளன. அதனைத்தான் நாம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்ட கமல்ஹாசனிடம், மக்களுடைய தற்போதைய பிரச்சினைகளுக்கு திராவிடக் கட்சிகள்தான் காரணம் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. “இதுகுறித்து ஏற்கனவே உரையாடல்களில் குறிப்பிட்டுள்ளேன். எனவே வெந்த புண்ணில் மீண்டும் வேலைப் பாய்ச்ச வேண்டாம்” என்று அதற்கு பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.