திடீர் தலைவர்களெல்லாம் மக்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர்: அதிமுக

அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்தவர்களும் திடீர் தலைவர்களாக முளைத்து அதிகாரத்தைப் பிடிக்க நினைத்தவர்களும் மக்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிமுக தொடங்கப்பட்டு 46 வருடங்கள் முடிவுற்ற நிலையில், நாளை 47வது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து இன்று (அக்டோபர் 16) தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “எம்ஜிஆர் தமிழக மக்கள் மீது கொண்ட எல்லையில்லாத அன்பின் அடையாளமாக உருவாக்கிய அதிமுக 46 ஆண்டுகளைக் கடந்து 47ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கையில் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியும், பெருமிதமும் பீரிட்டு எழுகிறது. 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக தோன்றிய நாளையும், அதற்கு முன்னும், பின்னும் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் அனைவரும் பசுமையாக நினைவில் வைத்திருக்கிறோம்.

பெரியாரும், அண்ணாவும் வகுத்தளித்த திராவிடர் இயக்க சிந்தனைகளையும், சமுதாய மறுமலர்ச்சிக் கொள்கைகளையும் நிலை நிறுத்தி, மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி தரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு உழைத்த எம்ஜிஆரின் உழைப்பைப் பயன்படுத்திவிட்டு, அவரை உதாசீனப்படுத்திய திமுக தலைமையை தட்டிக்கேட்டு, அண்ணாவின் பேரியக்கத்தை எம்ஜிஆர் ஒருவரால் தான் காப்பாற்றி வளர்க்க முடியும் என்று தமிழக மக்கள் முடிவு செய்ததால், மக்களின் மனநிலையை உணர்ந்து அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர்.

சுயநலமிக்க துரோகிகளால், எம்ஜிஅர் மீது மக்கள் கொண்ட பேரன்பை தாங்க முடியவில்லை. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு அந்தத் தீய சக்திகள் எம்ஜிஆருக்கும், அவர் பின் அணிவகுத்த தொண்டர்களுக்கும் இழைத்த கொடுமைகள் ஏராளம், ஏராளம். அவற்றையெல்லாம் கடந்து அதிமுக இன்று மகத்தான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

“எம்ஜிஆரின் அரசியல் பாதையை அறியாதவர்களும், ஜெயலலிதாவின் தியாகத்தின் உயர்வை மதிக்காதவர்களும், திடீர் தலைவர்களாக முளைத்து அதிகார போதையில் திளைக்க மனக்கோட்டை கட்டுபவர்களும், அதிமுகவை அசைத்துப் பார்க்க நினைத்து, இன்று மக்களால் அடையாளம் காணப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அதிமுகவையும் அதன் தொண்டர் பலத்தையும் எளிதாக எடை போட்டுவிட்டு அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்கள் இன்று, அதிமுகவுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கின் மகத்துவத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கிடக்கின்றனர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், “ஜெயலலிதா சூளுரைத்தவாறு, அதிமுக ஓர் ஆலமரம். ஆயிரம் காலத்துப் பயிர். இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு தமிழர்களுக்காகப் பாடுபடப்போகும் நல்லியக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த அதிமுகவை, தொடர்ந்து வெற்றிப் பாதையில் வழிநடத்திச் செல்ல அனைவரும் உறுதி ஏற்கும் தருணம்தான் அதிமுகவின் 47ஆவது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.

எம்ஜிஆர் வகுத்தளித்த, அண்ணாவின் அரசியல் பாதையில், ஜெயலலிதா வாழ்ந்து காட்டியவாறு, நம் பொது வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்திட இந்நாளில் சபதம் ஏற்போம்.

தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அதிமுகவை மேலும் வலுப்படுத்திட அயராது உழைப்போம். மக்கள் ஆதரவைப் பெற்று எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற உழைப்போம். அதிமுகவை எந்நாளும் கண்களெனக் காப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.