பாலியல் புகார் :எம்.ஜே.அக்பர் ராஜினாமா!

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்களையும்,
துன்புறுத்துதல்களையும் #metoo என்னும் ஹாஷ்டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும் முன்னாள் பத்திரிகையாளருமான எம்.ஜே. அக்பர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பத்திரிகையாளர் பிரியா ரமணி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் அவர் மீது இதுவரை 14 பெண்கள் வரை பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றனர். இதனையடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அக்பர் விலக வேண்டும் என்ற நெருக்கடிகள் முற்றின. இதுதொடர்பாக இந்திய ஊடகத்தில் உள்ள பெண்களுக்கான கூட்டமைப்பு சார்பில் குடியரசு தலைவருக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. முன்னதாக தன் மீதான புகாரை மறுத்த அக்பர், தனக்கு எதிராக பாலியல் புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று (அக்டோபர் 17) ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை. நீதிமன்றத்தில் எனக்கான நீதியைத் தேட முடிவு செய்துள்ளேன். எனவே பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானது என்று கருதுகிறேன். தற்போது வெளியுறவுத் துறை இணை அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்துள்ளேன். நாட்டுக்கு சேவை செய்ய எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.