சபரிமலையில் மோதல் !

சபரிமலைக்குப் பெண்கள் செல்வதைத் தடுப்பதற்காக நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்குப் பிறகு, ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்கள் சபரிமலைக்கு வருவதைத் தடுக்கும் வகையில், ஐயப்ப பக்தர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், கோயிலுக்கு வரும் வாகனங்களில் பெண்கள் இருக்கிறார்களா என்றும் சோதனையிட்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள். சபரிமலைக்குச் சென்ற சில பெண் பக்தர்களை, இவர்கள் திருப்பி அனுப்பினர்.
பெண் பக்தர்களைத் தடுப்பது தீவிரமடைந்த நிலையில், அங்கு போராட்டகாரர்களுக்கும் போலீசார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து, போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல் வீசினர். நிலக்கலில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் நடந்த கலவரத்தில், வயதான பெண் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சபரிமலைக்குச் செல்லும் முதல் பெண் என்று ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்ட மாதவி, வழியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பத்திரிகையாளர்கள் தாக்குதல்
சபரிமலை விவகாரம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலனை, கோயிலுக்குள் நுழைவதாக நினைத்துச் சிலர் தாக்கினர். அதேபோன்று சிஎன்என் நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் ராதிகா ராமசாமி சென்ற காரை மறித்தனர் போராட்டகாரர்கள்; அவர் மீது தாக்குதல் நடத்தினர். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் மற்றும் கேமரா மேன்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாஜக இரட்டை முகம்
கேரள அமைச்சர் விஎஸ்.சுனில் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் இரண்டு நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். “ஒருபக்கம், பிஜேபியை சேர்ந்த ஐந்து வழக்கறிஞர்கள் அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்கின்றனர். மற்றொரு பக்கம் பிஜேபியை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடுகின்றனர்” என்று கூறினார்.
மகளிர் ஆணையம்
சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பெண் பக்தர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
தீர்ப்பை நிறைவேற்றுவோம்
“சபரிமலை போராட்டம் உள்நோக்கம் கொண்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல. ஏனென்றால், இறைவனின் முன்னால் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அவர்கள் எவ்வாறு அங்கு பெண்களைத் தாக்கலாம்?
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற, நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்” என என்று கேரள அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
நடை திறப்பு
பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. அக்டோபர் 22ஆம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். கோயில் திறந்த முதல் நாளிலேயே, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
மத்திய அரசின் கண்காணிப்பு
சபரிமலை போராட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “அனைத்து நிலையிலும் உள் துறை அமைச்சகம் தயாராக உள்ளது. கேரள அரசு உதவி கேட்டால், நாங்கள் செய்யத் தயார்” என்று தெரிவித்துள்ளது.
144 தடை உத்தரவு
சபரிமலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதன் காரணமாக நிலக்கல், பம்பை ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவானது நாளை காலை முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இது ஐயப்ப பக்தர்களுக்கு பொருந்தாது என்று பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூகு அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.