நித்யானந்தா மீது மற்றொரு புகார்!

நித்யானந்தாவால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் சீடர்களில் ஒருவர், யூடியூபில் தன்னுடைய ஆபாசப்படங்களை வெளியிட்டதாகக் கூறி, அவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கடந்த வாரம் சைபர் கிரைம் போலீசில் சென்னையைச் சேர்ந்த 45 வயதான பெண்மணி ஒருவர் புகார் அளித்தார். யூடியூப் வலைதளத்தில் ‘porn star’ என்ற பெயரில் தன்னுடைய முகம் மார்பிங் செய்யப்பட்ட ஆபாசப் படத்தின் வீடியோ காட்சி இருப்பதாகவும், தனக்குத் தெரிந்த ஒரு நபர் மூலம் இது தெரிய வந்ததாகவும், அந்த புகாரில் தெரிவித்திருந்தார். “இந்த வீடியோ, மற்ற ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கிறது. இதைப் பார்ப்பவர்கள், என்னைப் பற்றி தவறாகவும் அவதூறாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றனர். சமூக வலைதளத்தில் நான் மிகவும் அசிங்கப்படுகிறேன். பிடரி என்ற பகுதியிலுள்ள நித்யானந்த தியானபீடத்தைச் சார்ந்த பரமஹம்ஸ நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும்” என்று அந்த பெண் தனது புகாரில் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 67ஏ (பாலியல் சம்பந்தமான படங்களை வெளியிடுதல்), 354சி (ஆபாசப் படங்களை பார்ப்பது), 509 (ஒரு பெண்ணின் மனநிலையை அவமதிக்கும் நோக்கத்துடன் கூடிய வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“புகாரில் பெயர் இடம்பெற்றிருக்கிறதே தவிர, அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை. போலீசாரின் விசாரணையில் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும். எங்களிடம் வந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவருக்கு எதிராகச் சில ஆதாரங்கள் கிடைக்கும் வரை, யாரையும் எங்களால் குற்றம்சாட்ட முடியாது” என சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண் சீடர்களில் சிலரை நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, 2010ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.