மறியல்: 300 மாணவர்கள் மீது வழக்கு!
திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தத் தூண்டியதாக, மாணவர் ஒருவர் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 300 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் திருவிக அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு, குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இக்கல்லூரியில், தமிழ்த் துறையில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் மாரிமுத்து. இவர், மாணவர் அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். சில தினங்களுக்கு முன்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, இவர் மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார்.
மாணவர்களைப் போராட்டம் நடத்தத் தூண்டியதாகவும், கல்லூரியின் பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுவதாகவும் கூறி, கல்லூரியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டார் மாரிமுத்து.
இந்த தகவலை அறிந்ததும், மாரிமுத்துவை உடனடியாகக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று (அக்டோபர் 16) திருவாரூர் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகச் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், போராட்டம் நடத்திய 200 மாணவிகள் உட்பட 300 மாணவர்கள் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை