கொலைச் சதி: மழுப்பும் இலங்கை

இலங்கை அதிபர் இந்திய புலனாய்வுத் துறையான ரா பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஏதும் குறிப்பிடவில்லை என்று, அதிபரின் ஆலோசகர் இன்று (அக்டோபர் 17) விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் சக அமைச்சர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா, ‘’இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘ரா’ என்னைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளது” என்று கூறியதாக தமிழகம், இலங்கை ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. மின்னம்பலத்தில் இன்று காலை 7 மணி பதிப்பில் இதுகுறித்து விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நேற்று நடைபெற வேண்டிய அமைச்சரவை தீர்மான விளக்க பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது. அதற்குப் பின் டெய்லி மிரர் பத்திரிகை நிருபரிடம் பேசியுள்ள இலங்கை அதிபரின் ஆலோசகரும், ஒருங்கிணைப்புச் செயலாளருமான ஷிரல் லக்திலகா, நேற்று வெளியான தகவலை முழுமையாக ஒப்புக் கொள்ளவும் இல்லை முழுமையாக மறுக்கவும் இல்லை.
“ இந்திய புலனாய்வுத் துறைகள் ரகசிய நடவடிக்கைகள் மூலம் தலைவர்களைக் கொல்ல நடந்துவரும் முயற்சிகள் பற்றி பொதுவாகத்தான் அதிபர் சிறிசேனா அமைச்சரவையில் பேசிக் கொண்டிருந்தார். இதுபற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிய வாய்ப்பில்லை என்றும் அதிபர் குறிப்பிட்டார். ரா என்ற குறிப்பிட்ட அமைப்பின் பெயரை அதிபர் உச்சரிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார் அதிபரின் ஆலோசகர்.
ஆக, இலங்கை அதிபர் உயிருக்கு, இந்திய புலனாய்வுத் துறை மூலம் அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்திருக்கிறார் அதிபரின் ஆலோசகர். ஆனால் ‘ரா’வின் பெயரை அதிபர் குறிப்பிடவில்லை என்று அதற்கு மட்டுமே மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
இந்திய தரப்பில் இருந்து இதுவரை பதில் எதுவும் சொல்லப்படவில்லை

No comments

Powered by Blogger.