18 வருட கோமாவில் அம்மா... தவிக்கும் மகள்.!

தன்னைப் பெற்ற நிமிடங்களில் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தாய்க்காக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கேட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதி அனைவரையும் கலங்கடித்திருக்கிறார் ஆதர்ஷா என்ற மாணவி.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் இடைக்காட்டன்காலையைச் சேர்ந்த ஷோபாவுக்கும், குலசேகரம் செருப்பாலூரைச் சேர்ந்த ராஜேஷ்பாபுவுக்கும் 1998 டிசம்பரில் திருமணம் நடந்தது. 3.3.2000 அன்று குலசேகரம் மருத்துவமனையில் சிசேரியன் மூலம், பெண் குழந்தையைப் பெற்றார் ஷோபா. ஆனால், பெற்ற குழந்தையின் அழுகுரலையும் கேட்காமல், கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். ஷோபாவின் தாய் வனஜா, அந்தக் குழந்தைக்கு ஆதர்ஷா எனப் பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தார்.
குலசேகரம் அருகே உள்ள இடைக்காட்டான்காலையில் அமைந்திருக்கும் ஆதர்ஷா வீட்டுக்குச் சென்றோம். படுத்த படுக்கையாக இருக்கும் தாயின் அருகில் ஆதர்ஷாவும், அவரின் பாட்டி வனஜாவும் அமர்ந்து உணவு கொடுத்துக்கொண்டிருந்தனர். ``சாப்பாடு கொடுக்கும்போது கையை அடிக்கடி கடித்துவிடுவாள்" எனக் கைகளில் உள்ள காயங்களைக் காட்டியபடி பேசினார் வனஜா.
``ஷோபா 12-ம் வகுப்பு படிச்சுட்டிருந்தபோ கல்யாணம் பண்ணிவெச்சோம். 2000-ம் வருஷம், கன்னியாகுமரி மாவட்டக் கூட்டுறவு சங்க மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஆதர்ஷா பிறந்துச்சு. இப்போ, அந்த ஆஸ்பத்திரியே இல்லை. ஆபரேசன் செய்தபோது பொருத்தின ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்துபோனதால சுவாசம் கிடைக்காமல் கோமா நிலைக்குப் போயிட்டாள். ஜன்னியும் வந்துட்டதால வேற ஆஸ்பத்திரிக்குப் போயிடுங்கன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனோம். 40 நாள் ஐ.சி.யு.வில் இருந்தும் பிரயோஜனமில்லை. 41-ம் நாள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்குப் போனோம். பிரசவம் நடந்த 15 நாளுக்குள்ளே வந்திருந்தா, சரிபண்ணியிருக்கலாம்னு சொன்னாங்க. லட்சக்கணக்கில் பணம் செலவானதுதான் மிச்சம். அப்புறம், நெய்யாற்றின்கரை அரசு தாலுகா ஆஸ்பத்திரியில் ஒன்றரை மாசமா இருந்தோம். அங்கே வெண்டிலேட்டர் இல்லாமல் தானாக சுவாசம்விடும் சிகிச்சை கொடுத்தாங்க.
இப்படிக் குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாசம் ஆஸ்பத்திரியே கதியா கிடந்தோம். பிஞ்சுக் குழந்தை ஆதர்ஷா, தாயின் அரவணைப்பு இல்லாமலே வளர்ந்தாள். அப்புறமும் மனசு விட்டுடலை. 2012-ம் வருஷம், திருவனந்தபுரம் அனந்தபுரி ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்கே ஆபரேஷன் பண்ணி, தலைவழியாக உணவுக்குழலுக்கு டியூப் போட்டாங்க. அதிலும் முன்னேற்றம் இல்லை. 3 லட்சம் ரூபாய் செலவு பண்ணினா வேற சிகிச்சை கொடுக்கலாம்னு சொன்னாங்க. என் தாலி வரைக்கும் வித்தாச்சு. பல லட்சம் கடனும் வாங்கியாச்சு. இனிமே கடன் கொடுக்க யாருமே இல்லை. இப்பவும் இவள் தலையில் டியூப் இருக்கு. அதை எடுக்க ஆபரேஷன் பண்றதுக்கு வசதியில்லை. மகளைத் தனியாக வீட்டில் விட்டுட்டு ஒரு நிமிஷம்கூட வெளியில போகமுடியாது. எறும்புகள் கடிச்சுடும்னு பக்கத்திலேயே இருப்பேன். கட்டிலிலே இயற்கை உபாதை கழிஞ்சு நைஞ்சுடறதால், சிமென்டால் கட்டில் செஞ்சு டைல்ஸ் பதிச்சிருக்கோம். உடம்புல புண் வந்துடாம இருக்க, தினமும் ரெண்டு முறை குளிப்பாட்டி விடுவோம். இவளைத் தூக்கி தூக்கியே எனக்கு நெஞ்சுவலி வந்துருச்சு. என் புருஷன் சோமன், போலீஸில் தலைமைக் காவலரா இருந்தார். மகளின் நிலையை நினைச்சு நினைச்சே 2003-ம் வருஷம் ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேர்ந்துட்டார். அவர் இறந்த மூணாவது நாள் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கான ஆர்டர் வந்துச்சு. ஆதர்ஷாவின் அப்பாவும் வேற பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு வெளிநாட்டுக்குப் போயிட்டார். நானும் என் அப்பா குஞ்சன்பிள்ளையும்தான் மகளையும் பேத்தியையும் கவனிச்சுக்கிறோம். இப்பவும் மருந்து செலவுக்கே தினமும் 500 ரூபாய் ஆகுது. எங்கள் காலத்துக்குப் பிறகு மகள் நிலையும் ஆதர்ஷா நிலையும் என்னவாகுமோ" என அந்தத் தாய் பேசப் பேச நம் கண்கள் கலங்குகின்றன.
``என் மகளுக்கு ஏற்பட்ட நிலை யாருக்குமே வரக் கூடாது. ஆதார் அட்டை இல்லைன்னு ரேஷன் கார்டிலும் அவள் பெயரை எடுத்துட்டாங்க. எல்லாத்துக்கும் காரணம் டாக்டர்கள் கொடுத்த தப்பான சிகிச்சைதானே? நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு போட்டோம். சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடந்துச்சு. மதுரை ஐகோர்ட் கிளை தொடங்கினதும் அங்கே மாத்தினாங்க. இதோ 18 வருஷமாகியும் எந்த முடிவும் வரலை. அந்த விரக்தியில்தான் ஆதர்ஷா நீதிபதிக்குக் கடிதம் எழுதினாள். இனியாவது எங்களுக்கு நீதி கிடைக்கும், விடிவு பிறக்கும்னு நம்புகிறோம். என் பொண்ணோட மருத்துவச் செலவுக்கு நஷ்டஈடு கொடுக்கணும். பேத்தியின் வருங்கால வாழ்வுக்காக அரசு வேலை கொடுக்கணும்" என்கிறார் வனஜா.
தன் தாயின் தலையை வருடியவாறு பேச ஆரம்பித்த ஆதர்ஷா, ``நான் குமாரகோவில் நூருல் இஸ்லாம் காலேஜில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படிக்கிறேன். வருஷத்துக்கு 30,000 ரூபாய் கட்டணும். அடுத்து எம்.ஏ. படிக்க ஆசையா இருக்கு. ஆசிரியராகவோ, வருவாய்த் துறையிலோ வேலைக்குப் போகணும். ஆனால், காலேஜ் ஃபீஸ் கட்டறதுக்கே ரொம்பச் சிரமமா இருக்கு. இதுபற்றி கவர்னருக்கு லெட்டர் எழுதினேன். இந்த வருஷம் காலேஜ் கட்டணத்தை கவர்னர் அனுப்பிவெச்சசர். என் அம்மாவின் நிலை, என்னோடு காலேஜில் படிக்கிறவங்களுக்கும் சொன்னதில்லை. கவர்னரின் பணம் வந்த பிறகுதான் கல்லூரி முதல்வருக்கே தெரியும். என் நிலையைப் பார்த்து, காலேஜ் பஸ் கட்டணத்தை முதல்வரே ஏற்றுக்கொண்டார்.
அம்மாவின் தொடுதலே இல்லாமல் வளர்ந்துட்டேன். ஸ்கூலில் படிக்கும்போது, ஆண்டுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மற்ற பிள்ளைகள் எல்லாம் அம்மா, அப்பாவோடு வருவாங்க. எனக்கோ யாருமே இருக்க மாட்டாங்க. அதை நினைச்சு நினைச்சு அழுகையாக வரும். கொக்கோ விளையாட்டு, துளிர் அறிவியல் தேர்வுகளில் பரிசுகள் வாங்கும்போதெல்லாம் மற்ற மாணவர்கள் பெற்றோருடன் இருப்பாங்க. நான் மட்டும் தனியா இருப்பேன். பரிசோடு வீட்டுக்கு வந்து அம்மா முன்னாடி வெச்சுட்டு அழுவேன். நான் குழந்தையாகப் பிறந்ததும் அம்மாவும் குழந்தையா ஆகிட்டாங்க. தாய்ப் பாசம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டதோடு சரி. அது எப்படி இருக்கும் எனத் தெரியாது. இதைவிடக் கொடுமை... அம்மாவுக்கு நான் எப்படி இருப்பேன்னு கூடத் தெரியாது'' என்றபடி விசும்பும் ஆதர்ஷாவைத் தேற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை.
`எனக்கு வயது 18 ஆகிறது. தற்போது பி.ஏ.படித்து வருகிறேன். என்னைப் பிரசவிப்பதற்காக 18 ஆண்டுகளுக்கு முன்பு, என் அம்மாவை குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நான் பிறந்துவிட்டாலும், என் தாயார் ஷோபாவுக்கு அளித்த தவறான சிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். 18 வருடங்களாகப் படுத்த படுக்கையாகவே உள்ளார். இதனால், என் தந்தை எங்களைக் கைவிட்டு வேறு திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்துவருகிறோம். தவறான சிகிச்சைக்கு இழப்பீடு கேட்டும், அம்மாவுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் கேட்டு தொடர்ந்த வழக்கு, நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்காமல் உள்ளது' எனக் கண்ணீருடன் குறிப்பிட்டிருக்கும் ஆதர்ஷாவின் கடிதத்தைப் படித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ், தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இதற்கு அரசு தரப்பில் விளக்கமும் கேட்டுள்ளனர்.
பாட்டி, மகள், பேத்தி என மூன்று பெண்களும் கடுமையான வாழ்க்கை போராட்டத்தில் இருப்பது, அந்த வீட்டின் ஒவ்வோர் அடியிலும் தெரிந்தது. உயர் நீதிமன்றம், ஆதர்ஷாவின் கடிதத்தைக் கருணையுடன் அணுகியுள்ள நிலையில், தமிழக அரசு தரும் விளக்கத்தைத் தொடர்ந்து, நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
(உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளங்கள் கீழ் குறிப்பிட்டுள்ள வங்கி அக்கென்ட் மூலமாக உதவி செய்யலாம். இந்தச் செய்தி வாயிலாக தெரிந்து உதவி செய்தவர்கள் எங்களிடம் தெரியபடுத்தினால் நாங்கள் அந்தப் பிள்ளையை தொடர்பு கொண்டு அதை உறுதி செய்வதற்கு வசதியாக இருக்கும்).
ATHARSHA RAMESH BABU
AC: 1557101016461
Ifs: CNRB0001557
Canara bank ponmanai branch.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.