பன்னீரை எச்சரித்த எடப்பாடி!

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் ராயப்பேட்டை காட்டியது.
‘அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இருக்கிறேன்.
இன்று அதிமுக தொடங்கப்பட்ட நாள். 47ஆவது ஆண்டு விழாவை எடப்பாடி தலைமையில் கோலாகலமாகக் கொண்டாடிவருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என எல்லோருமே இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்துவிட்டார்கள். தொண்டர்கள் கூட்டத்தை விட, போலீஸ் தலைகளே அதிகம் இருந்தன. முதல்வருக்கான எஸ்கார்ட், துணை முதல்வருக்கான எஸ்கார்ட், அமைச்சர்களுக்கான எஸ்கார்ட் என மொத்தமும் அதிமுக தலைமை அலுவகத்துக்கு வந்துவிட்டதால் திரும்பிய பக்கமெல்லாம் காக்கி டிரஸ்தான் தெரிந்தது.
ஜெயலலிதா இருந்தவரை அவரைப் பார்க்கவே தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினர் திரண்டு வருவார்கள். ஆனால், இன்று அப்படி வெளியூரில் இருந்தெல்லாம் யாரும் எடப்பாடியையோ பன்னீரையோ பார்க்க கிளம்பி வரவில்லை. கட்சி அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடியும் பன்னீரும் மாலை போட்டார்கள். அதன் பிறகு இருவருமாகச் சேர்ந்து கொடியும் ஏற்றினார்கள்.
பிறகு பத்திரிகையாளர்கள் இல்லாமல் கட்சி நிர்வாகிகளிடம் மட்டும் இருவரும் பேசினர். முதலில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர், ‘இது எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. அதன் பிறகு ஜானகி அம்மா, பிறகு நமது அம்மா, அதன் பிறகு நான், அடுத்து எடப்பாடியார் என 5 முதல்வர்களை தந்த கட்சி. நம் காலத்துக்குப் பிறகும் இது நிலைத்து நிற்க வேண்டிய கட்சி. ஆனால் இந்தக் கட்சியை அழிக்கத்தான் நம் எதிரிகள் திட்டம் போட்டுட்டு இருக்காங்க. குறிப்பாக நம்மோடு இருந்து பிரிந்து சென்றவர்கள்தான் நம்மை அழிக்கத் துடிக்கிறாங்க. உங்களிடம் இருந்து என்னைப் பிரிக்கவும் நாடகம் போட்டுப் பார்த்தாங்க. நடந்தது என்ன என்பதை நான் வெளிப்படையாக சொல்லிவிட்டேன். ஆனால், ஏதோ நான் தப்பு செய்த மாதிரி நாடகத்தை நடத்திக் காட்டினாங்க. இந்த இயக்கத்தை உடைக்க, என்னை உங்களிடம் இருந்து பிரிக்க சதி நடக்கிறது. யாரு என்ன செய்தாலும் எதுவும் நடக்காது. இது அம்மா கட்டிக்காத்த இயக்கம். அம்மா வளர்த்தெடுத்த இயக்கம். எந்தக் கொம்பனாலும் எதுவும் நம்மை அசைத்துப் பார்க்க முடியாது.
நம் இயக்கத்தில் இருந்து இனி ஒருவரும் வெளியே போகக் கூடாது. நம்மிடம் இருக்கும் ஆட்களை வெச்சுகிட்டே ஏதோ உறுப்பினர்களை சேர்க்கிறோம்னு சொல்லிட்டு இருக்காங்க. நாம் எவ்வளவு உறுப்பினர்களை வெச்சிருக்கோம் என்பதை தெளிவுப்படுத்தணும். அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் நம்மிடம்தான் இருக்காங்க என்பதை நாம் ஆதாரத்துடன் முன்வைக்கணும்.
அதுக்கு நாம் நம் கட்சியின் உறுப்பினர்களை புதுப்பிக்கணும். ஒவ்வொரு தொகுதி வாரியாக அதற்கான வேலைகளை நாம் தொடங்கணும்.இது நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள பயன்படும். அதற்கு உங்களின் எல்லோர் ஒத்துழைப்பும் தேவை...’ என்று பேசி முடித்தார்.
அதன் பிறகு இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் சொன்ன கருத்தில் நான் உடன்படுகிறேன். அவர் சொன்னது போல நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அம்மா வளர்த்தெடுத்த கட்சியை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். ஏதோ நம் கட்சிக்குள் ஸ்லீப்பர் செல் இருப்பதாக தினகரன் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அப்படி ஒரு ஸ்லீப்பர் செல் நம் கட்சியில் இல்லை. நம்மிடம் இல்லை. துரோகிகள் யாரும் நம்மிடம் இல்லை. துரோகம் செய்பவர்களுக்கான இடம் இது இல்லை. எதிரிகளை கூட நான் மன்னித்து விடுவேன். ஆனால், துரோகிகளையும் துரோகத்தையும் ஒருபோதும் நான் மன்னிக்கவே மாட்டேன். அப்படி இருப்பவர்களை களையெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தவறு செய்ய நினைப்பவர்களாக இருந்தாலே இனி களையெடுப்போம் என்பதை இந்த நன்னாளில் நாம் சூளுரையாகவே ஏற்றுக் கொள்வோம்’ என்று எச்சரித்தார்.
தலைமைக் கழக நிர்வாகிகள் இதுகுறித்து பேசிக்கொள்ளும்போது, ‘அரசு நிகழ்ச்சிகள் என்றால் முதல்வர் எடப்பாடி நிறைவுரையாற்றுவது சரியாக இருக்கும். ஆனா இது கட்சி நிகழ்ச்சி. இங்கே ஒருங்கிணைப்பாளரா இருக்கிற பன்னீர் அண்ணன் தான் நிறைவுரையாற்றணும். ஆனா எடப்பாடிதான் இங்கயும் கடைசியா பேசுறாரு. ஆக ஆட்சியைப் போல கட்சியிலும் தானே முதலிடம்னு சொல்லாம சொல்றாரு. கொஞ்ச நாள் முன்னாடி நடந்த உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டத்துல இருந்துதான் இந்த புது ஃபார்முலாவை எடப்பாடி கடைபிடிக்கிறாரு. அன்னிக்கு மத்த எல்லாரும் பேசி முடிச்சதும் பன்னீரைப் பார்த்து நீங்க பேசுங்கன்னாரு. அந்த இடத்துல எதுவும் சொல்ல முடியாம பன்னீர் பேசிட்டாரு. அதன்பிறகு கடைசியா எடப்பாடி பேசினாரு. இப்பவும், அதேபோல பன்னீருக்கு அடுத்து நிறைவா பேசி தானே கட்சிக்கும் முதல் நபர்னு காட்டிக்கிறாரு எடப்பாடி. இது பன்னீருக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க எச்சரிக்கை.. இதை பன்னீர் இன்னும் எத்தனை நாளைக்கு தாங்கிக் கொள்ளப் போகிறாரோ’ என புலம்பிவருகிறார்கள்” என்று முடிந்தது ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.