கூட்டணியில் யார், யார்? திமுக முடிவு!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப்பில் முதலில் ஒரு வீடியோ வந்து விழுந்தது. இன்று நடந்த திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய வீடியோதான் அது.
“2019 நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒருவேளை அத்துடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வந்தால் அதனை எப்படி சந்திப்பது, எந்த விதமான அணுகுமுறையைக் கையாள்வது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்திருக்கிறோம். திமுகவுடன் தோழமையிலுள்ள கட்சிகளின் நிலைமை குறித்து விவாதித்தோம். என்னதான் உயர்நிலை செயல்திட்டக் குழுவில் பேசி முடித்திருந்தாலும், விரைவில் தலைமைக் கழக நிர்வாகிகளோடு பேசி, அதன் பின்னர் திமுகவின் இதயமான பொதுக் குழுவில் முடிவெடுத்து தேர்தல் வரும் நேரத்தில் அது குறித்து அறிவிப்போம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அப்போது இருக்கக் கூடிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு, குழுக்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் தேர்தல் அறிக்கை முறையாகத் தயாரிக்கப்படும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விவாதித்துள்ளோம். அதனை வெளிப்படையாகச் சொல்ல முடியாது” என்று அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார் ஸ்டாலின்.
தொடர்ந்து இன்னொரு மெசேஜை அனுப்பியது வாட்ஸ் அப்.
“திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் எப்போது முடியும், ஸ்டாலின் வெளியே வந்து என்ன பேசுவார் என்று திமுக தொண்டர்களுக்கு இணையாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் இன்று எதிர்பார்த்துக் காத்திருந்தன. ஏனென்றால் திமுக அணியில் நாம் இருக்கிறோமா இல்லையா என்ற வினாவுக்கு விடை தேடவே பல கட்சிகள் காத்திருந்தன. அதிலும் குறிப்பாக தைலாபுரத்தில் இருந்த டாக்டர் ராமதாஸும், சென்னையில் இருந்த அன்புமணியும் திமுகவின் முடிவு குறித்து அறிய ஆர்வத்தோடு காத்திருந்தனராம்.
கூட்டம் முடிந்து அனைவரும் அறிவாலயத்தில் இருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே பாமக நிர்வாகிகள் சிலர் திமுகவில் இருக்கும் தங்கள் நண்பர்களிடம் கூட்டம் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம் விசாரித்தபோது, ‘திமுக இப்ப இருக்கிற நிலைமைக்கு ஒரு மெகா கூட்டணி அமைக்கணும், அதுக்கு பாமகவை கூட்டணியில சேர்த்துக்கணும்னு கூட்டத்துல சில பேர் ஸ்டாலின் கிட்ட கோரிக்கை வச்சாங்களாம். அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் எல்லா இடங்களிலும் நமக்கு ஒத்துழைப்பு கொடுக்கறதில்ல. அதனால அவங்களுக்கு பதிலாக பாமகவை கூட்டணிக்குக் கொண்டுவந்தா வட மாவட்டங்கள்ல கொத்தோடு அள்ளலாம்னும் பேசியிருக்காங்க.
ஆனா வடமாவட்ட திமுக பிரமுகர்களே இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. இப்ப கூட்டணியில இருக்கிற காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, மமகனு எல்லா கட்சிகளும் ஸ்டாலின்தான் முதல்வர்னு பகிரங்கமா ஏத்துக்கிட்டாங்க. ஆனால் பாமகவோ இன்னும் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்னு சொல்லிக்கிட்டிருக்காங்க. அவங்களை எப்படி ஏத்துக்கறது என்று ஸ்டாலினிடம் சிலர் வாதாடியிருக்காங்க. துரைமுருகன் அண்ணன் எவ்வளவோ போராடிப் பாத்தும் யாரும் ஏத்துக்கலையாம்’ என்கிறார்கள் பாமக நிர்வாகிகள் வட்டாரத்தில்.
பாமகவினரை அடுத்து இந்தக் கூட்டத்தை ஏகத்துக்கும் எதிர்பார்த்துக் காத்திருந்தது காங்கிரஸ் கட்சிதான். ஏனெனில், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்றுதான் ஸ்டாலின் சொல்லி வந்தாரே தவிர, காங்கிரஸ் ஆட்சி என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. ஒருவேளை 2014 போல ஆகிவிடுமோ என்று நினைத்த காங்கிரஸாரும் திமுகவின் உயர் நிலைக் கூட்டம் முடிந்ததும் விசாரித்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி, ‘நம்மை ஏற்று நம்மோடு தொடர்ந்து பயணித்து வரும் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மதிமுக, விடுதலைச் சிறுத்தை, சிபிஎம், சிபிஐ, மமக ஆகிய கட்சிகள் போதும்’ என்று ஸ்டாலின் சொல்லிவிட்டாராம்.
கூட்டணியை முடிவு செய்துவிட்டு அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் பற்றியும் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வருவதற்கு எல்லா வாய்ப்பும் இருக்கு. அதனால எல்லாரும் எல்லாவற்றுக்கும் தயாரா இருங்கனு ஸ்டாலின் உயர் மட்டக் கூட்டத்துல சொல்லியனுப்பியிருக்கிறார். அடுத்து பொதுக்குழு எப்போது என்ற எதிர்பார்ப்பு இப்போதே திமுகவில் கிளம்பிவிட்டது” 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.