பிறந்தநாளிலேயே இறந்த முன்னாள் முதல்வர்!

காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தர பிரதேசம், உத்தராகண்டின் முன்னாள் முதல்வருமான என்.டி.திவாரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார், அவருக்கு வயது 93.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திவாரிக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியிலுள்ள மேக்ஸ் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் 2.50 மணியளவில் உயிரிழந்தார். 1925ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி பிறந்த திவாரி, தனது பிறந்த தினத்திலேயே உயிரிழந்துள்ளார்.
.திவாரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், “திவாரி ஆற்றியுள்ள பணிகளை உத்தராகண்ட் எப்போதும் மறவாது. நிதி மற்றும் தொழில் துறையில் உத்தராகண்ட் வளர்ச்சி பெறுவதற்கு திவாரி முக்கிய பங்காற்றினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை குறிப்பு
உத்தராகண்ட் மாநிலம் நைனிதால் மாவட்டத்திலுள்ள பலூட்டி கிராமத்தில் பிறந்த நாராயண் தத் திவாரி, அலகாபாத் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ அரசியல் அறிவியலும், எல்எல்பி சட்டப்படிப்பும் படித்துள்ளார். பிரஜா சோசியலிஸ்ட் என்னும் கட்சியை தொடங்கிய திவாரி, பின்னர் 1963ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
1976-77, 1984-85 மற்றும் 1988-89 என மூன்று முறை உத்தர பிரதேச முதல்வராக பதவி வகித்துள்ள திவாரி, உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பின்னர் 2002-07 வருடம் வரை உத்தராகண்ட் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். சரண் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
1990ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளருக்கு திவாரி பெயரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1994ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, திவாரி காங்கிரஸை ஆரம்பித்த அவர், சோனியா காந்தி தலைவரான பிறகு மீண்டும் காங்கிரஸிலேயே இணைந்தார். 2007ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட திவாரி, 2009ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

No comments

Powered by Blogger.