வடசென்னை படத்திற்கு எதிர்ப்பு!

வட சென்னை திரைப்படம் நேற்று (அக்டோபர் 17) வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படம் வட சென்னை மக்களைத் தவறாக சித்தரிக்கிறது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வட சென்னை பகுதியை ரவுடிகள், வன்முறைக் கும்பல்கள் வாழும் இடமாக தமிழ் சினிமாவில் பல படங்கள் சித்தரிக்கின்றன என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுவருகின்றன. தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள ‘வடசென்னை’ திரைப்படம் கேங்க்ஸ்டர் குழுக்களின் மோதல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படமும் அதுபோன்ற கருத்தை பரப்புவதாக சு.ஆ.பொன்னுசாமி தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வட சென்னை சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? வட சென்னையில் வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களா? வட சென்னை பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமா? அப்படி உங்கள் கூற்றுப்படி வட சென்னையில் சமூக விரோதிகள் மட்டுமே வாழ்வதாக வைத்துக் கொண்டால் வட சென்னையை தரம் தாழ்த்தி படமெடுப்போரே வடசென்னையின் தரம் உயர்த்த எப்போதாவது சிந்தித்ததுண்டா..?” என அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திரைப்படங்கள் மக்களின் மனநிலையை மாற்றுவதில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்பதைக் கூறும் அவர், “மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் வட சென்னையின் ஏதேனும் ஒரு பகுதிக்கு செல்ல ஆட்டோ ஓட்டுநரை அழைத்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் விதைத்திருக்கும் எதிர்மறையான விதை எப்படி விருட்சமாக அவர்களின் மனதில் வளர்ந்திருக்கிறது என்பதை உணர்வீர்கள்” என்று கூறியுள்ளார்.
“இனியாவது வட சென்னை குறித்தான எதிர்மறையான, விஷமக் கருத்துக்களை கொண்ட திரைப்படங்கள் உருவாக்குவதை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கை விட வேண்டும். அவ்வாறான படங்களில் நடிப்பதை நடிகர், நடிகைகள் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அவ்வாறான திரைப்படங்கள் தயாராகுமானால் அத்திரைப்படங்களை விநியோகம் செய்யாமல் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்கள் வெளியிடாமலும் புறக்கணிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"வட சென்னை பகுதி வாழ் மக்கள் அமைதியாக இருப்பதால் வீழ்ந்து கிடப்பதாக எண்ணி விட வேண்டாம். அவர்கள் அனைவரும் விழித்துக் கொண்டு எழுந்து போராட தொடங்கினால் உங்களின் ஒரு திரைப்படம் கூட வட சென்னை பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் மட்டுமல்ல உலகெங்குமே வெளியாகாமல் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும். இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. வட சென்னை வாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத உங்களது திரைப்படங்களை தடை செய்ய நீதிமன்றத்தின் கதவைத் தட்டி நிரந்தரமாகத் தடை பெற இயலும். ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற எண்ணத்திலும், தேவையின்றி இலவசமாக உங்களது திரைப்படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்கிற எண்ணத்திலும் தான் நாங்கள் அமைதி காக்கிறோம். அமைதி காப்பதாலேயே நாங்கள் பலவீனமானவர்கள் என எண்ணி விட வேண்டாம்” என்றும் சு.ஆ.பொன்னுசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.