வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் வயல்நிலங்களை அபகரிக்கும் வனஜீவராசிகள் !
வடமராட்சி கிழக்கில் வயல் நிலங்களின் உரிமையாளர்கள் தமது நிலத்தை காலபோக நெற்செய்கைக்காக உழுத போது அந்தப் பிரதேசம் தமது ஆளுகைப் பகுதி என்று தெரிவித்து வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்துள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படுகின்றன என்று தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலும் வனஜீவராசிகள் திணைக்களம் விவசாய நட வடிக்கைகளுக்குத் தடை விதித்துள்ளது.
1938ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்திருந்த வனஜீவராசிகள் திணைக்களம் போருக்குப் பின்பு மக்களுக்கோ,மாவட்டச் செயலருக்குக் கூட எந்தத் தகவலையும் வழங்காது இரகசியமான முனையில் 48 ஆயிரம் ஏக்கரை தமக்குச் சொந்தமான காணிகளாக அறிவித்துள்ளது.
வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக் கேணி, நிச்சியவெட்டை, போக்கறுப்பு, சுண்டிக்குளம் பகுதிகளில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் வயல்நிலங்களில் மக்கள் நெற்பயிர்ச் செய்கை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்தனர். வழமை போன்று இந்த ஆண்டும், விவசாயிகள் தமது வயல் நிலங்களில் நெல் விதைப்பிலும், நெல் விதைத்தவர்கள் வயல் வேலிகளையும் அடைத்துக் கொண்டிருந்த போது திடீரென, மூன்று தினங்களுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகரிகள், மக்களை உடனடியாக வெளியேறுமாறு பணித்துள்ளனர். இந்தத் திடீர் பணிப்புரை காரணமாக நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.
தமது தேவைகளுக்காக பனம் மட்டைகளைக்கூட தமது சொந்தக் காணிகளில் பொறுக்க முடியாதுள்ளது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனைவிட, சுண்டிக்குளம் நன்னீர் ஏரியில் இறால் மற்றும் மீன்பிடி மேற்கொள்ளவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மக்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் மாவட்டச் செயலர் நா.வேதநாயகனிடம் கேட்டபோது, சுண்டிக்குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் காணிகளோடு இணைந்த நிலப்பரப்பையே வனஜீவராசிகள் திணைக்களம் அடையாளப்படுத்தியது. உடனடியாக பிரதேச செயலர் சம்பந்தப்பட்ட திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு நிலமையை ஆராய்ந்தார். அங்குள்ள உறுதிக் காணிகளிலும் இதுவரை காலமும் நீண்டகாலமாக விதைப்பு மேற்கொண்ட நிலங்களிலும் விவசாயம் மேற்கொள்ள முடியும் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் மேலதிகமாக சுவீகரித்து வெளியிடப்பட்ட அரசிதழை இல்லாமல் செய்து பழைய அளவில் அரசிதழை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. பழைய அளவிலான நிலத்தை மட்டும் உரிமைகோரி எஞ்சிய நிலத்தை விடுவிக்கும்போது அந்த மக்களுக்கான வாழ்விட நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் மேற்கொள்ள முடியும். அந்த மக்களின் நிலை கருதி அதற்கான முயற்சிகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து மாவட்டச் செயலகமும் முன்னெடுத்து வருகின்றது என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை