உரிமை அடிப்படை மனித உரிமை கருத்துச்சுதந்திரம் - அறம் - சட்டம்!

 (நிருபர் பி.சுரேக்கா)
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்புச்சட்டத்தின் அத்தியாயம் 111 உறுப்புரை 14 (1) இன் (அ) பகுதியின் பிரகாரம்
" வெளியிடுதல் உட்பட பேச்சுச்சுதந்திரமும் கருத்துத்தெரிவித்தற் சுதந்திரமும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரித்தானது "
இத்தகையதோர் நிலைப்பாட்டின் கீழ் கருத்துத்தெரிவிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமை.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. எனினும்
சமூகவலைத்தளங்களின் கட்டவிழ்க்கப்பட்ட பயன்பாடு தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி என்பவற்றுடன் நல்லாட்சி நிலவுகின்றது என்ற நம்பிக்கை நிலவிய பின்னரே இலங்கையின் எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் தனிமனித கருத்துச்சுதந்திரத்திற்கான ஓர் வெளி சாதாரணமாகியிருந்தது.
ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கி அந்த எல்லைக்குள் குடும்ப சமூக பொருளாதார அரசியல் சார் பார்வைகள் ,கருத்துக்கள் , ஆதங்கங்கள் , விமர்சனங்களை ஒருவர் முன்வைக்கவும் , ஒரே சிந்தனை கொண்ட / எதிர்வினையாற்றக்கூடிய
ஒருவரோ அல்லது பலரோ அது தொடர்பில் உடன்பாடாகவோ / எதிர்மறையாகவோ கருத்தைக் கருத்தால் மோதவும் நுகரவும் முடிந்தது." The FaceBook is index of the mind " என்று கூறக்கூடிய வகையில் மனதிலுள்ளவற்றைப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேச இந்த முகப்புத்தகங்களின் பயன்பாடே உச்ச அளவில் இருக்கின்றது.
இத்தகைய ஓர் பின்னணியின் கீழ் ஓர் பிரஜை தன்னுடைய நாளாந்த வாழ்க்கையைக்கடக்கும் போது எதிர்கொள்கின்ற / சந்திக்கின்ற / பிடிக்கின்ற / வெறுக்கின்ற / மாற்றத்தை அவாவுகின்ற/ கேள்விக்குட்படுத்தவிழைகின்ற நேர்,எதிர் விடயங்களை பொதுவெளிக்கு எடுத்தியம்ப முனைவது சாதாரணமான ஓர் நிகழ்வாகவே இருக்கும்.
தனிநபர் ஒருவரை உள ரீதியாக , உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கின்ற / விரக்திக்கு ஆளாக்குகின்ற / மானபங்கப்படுத்துகின்ற வகையில் பதிவுகளை / கருத்துக்களை வெளியிடுகையில் சட்டத்தையும் நாம் கவனத்திற்குக்கொள்ளாமல் விடமுடியாது. அது அறமும் அல்ல. ஆனால் ஓர் உண்மை நிலவரத்தை சமூகத்தின் நன்மைக்கென நல்நோக்கத்திற்காக ஒருவர் பதிவிடுகின்ற போது கட்டடாயமாகவோ அல்லது மறைமுகமாகவோ பிறிதொருவர் தன் மீதான காழ்ப்புணர்வையும் / வெறுப்பையும் வெளிப்படுத்துகின்ற பதிவு என ஊகித்து வெளிப்படையான கருத்திற்கு அப்பால் இதன் உட்கிடை இது தான் என விதண்டாவாதம் புரிந்து அந்தப்பதிவை நீக்கவேண்டும் என வழக்குரைப்பது விசாரணைக்குட்படுத்துவது எத்தகைய அபத்தமானது.கட்டாயமாக அது ஒருவருடைய கருத்துச்சுதந்திரத்திற்கான தடையே அன்றி யாதொன்றுமல்ல.
" மானிடரின் சந்தோசத்திற்காகவே கட்டமைப்புக்களும் நிறுவனங்களும் இருக்க வேண்டுமேயன்றி கட்டமைப்புக்களினதும் நிறுவனங்களினதும் ஸ்திர நிலைக்காக மானிடன் தன் சந்தோசங்களைத்தியாகம் செய்யக்கூடாது " என்ற கூற்றிற்கு வலுச்சேர்ப்பதாகவே இலங்கைத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இலங்கை அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது .
இலங்கையில் நிலவும் நல்லாட்சியின் சமிக்ஞையாக விளங்கும் இந்தத் தகவல் அறியும் உரிமைச்சட்டமானது " அரசைக் கண்ணாடிப்பெட்டிக்குள் வைப்பதற்குச்சமனானது " என புகழாரம் சூட்டப்படுவதுடன்
மக்களின் கூருணர்வுக்கு மதிப்பளித்து மக்களிடமிருந்து வரிகளாகப்பெறப்படும் பணத்தைக்கொண்டு செயற்பட்டுவரும் அரச நிறுவனங்கள் தொட்டு அரச சேவையாற்றும் அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ளது.
மேலும் தகவல் /செய்தி/ தரவு வழங்குதல் தொட்டு அனைத்து வகையான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பாடல்கள் குறித்தும் ஏலவே இருந்து வந்ததான விதிகள்/ கோவைகள் / நிறுவனச்சட்டங்களை மேவிய சட்டமாகவும் கொண்டாடப்படுகின்றது. நடைமுறையில் காணப்படுகின்ற " சட்டம் அல்லது விதிகளை குறுகிய / தவறான நோக்கம் ஒன்றிற்காகப்பயன்படுத்துகின்ற அதிகாரமையத்தைத் தகர்ப்பதாகவும் கேள்விக்குட்படுத்துவதாகவும் இருப்பதே இதன் அதியுயர் சிறப்பும் ஆகின்றது.
ஆக இவற்றையெல்லாம் அறியமுற்படாது ஒரு கருத்து பகிரப்படுகின்ற போது அந்தக்கருத்துடன் மோதி கருத்தை வெல்லக்கூடிய தகைமையை வளர்த்துக்கொள்ளவேண்டியவர்களாகவே இருக்க வேண்டுமே தவிர கருத்துப்பகிர்பவரை கேலிக்குள்ளாக்கி கருத்தைப்பொய்ப்பிக்க முனைவதிலும் தண்டிப்பதிலும் பயனில்லை. அது அறத்தை அல்லது சட்டத்தை ஒரு இருட்டடிப்பதற்குச்சமமானது. சட்டம் எங்கேயும் எல்லையற்ற ஔியைப்பாய்ச்சுவதற்காக மட்டும் பயன்பட வேண்டியது. அதை நாம் வளைத்து ஒடுக்குதல் கூட அநீதி தான்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.