மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி:கல்வித் துறை!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இன்று(அக்டோபர் 19) அறிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்,“அரசுப் பள்ளி மாணவிகளின் தற்காப்புக்காக கராத்தே, ஜூடோ,டேக்வாண்டோ ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு, தமிழகம் முழுவதும் 5,711 உயர்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 99 பள்ளிகள் தேர்வாகியுள்ளன. பள்ளி ஒன்றிற்கு 100 மாணவிகள் என்ற வீதத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படும். முதற்கட்டமாக, வாரத்திற்கு இரண்டு நாள்கள் என மூன்று மாதத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.
அக்டோபர் 22ஆம் தேதி முதல் பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம், மாணவிகள் தன்னம்பிக்கையை அதிகரிப்பது, உடல் மற்றும் மன ரீதியாக தங்களை வலிமைப்படுத்தி கொள்வது போன்றவற்றை வளர்த்து கொள்ள உதவும்.
இதற்காக, ஏற்கனவே பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பள்ளி வேலை நாட்களில் இதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்கல்வி வகுப்பு ஆசிரியர் அல்லது ஆசிரியர் முன்னிலையில் இந்த பயிற்சி வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.