விஜய்யின் முழு அரசியல் அடி!

விஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், மிக நெருக்கமாக படத்தின் முதல் டீசரை வெளியிட்டது எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. டீசர் என்று பெயர் வைத்திருந்தாலும், ஒரு டிரெய்லருக்கு தேவையான அத்தனை தகவல்களையும் வெளியிட்டிருக்கிறது இந்த டீசர்.
பெரும் கார்ப்பரேட் கிரிமினலாக வலம்வரும் விஜய், இந்தியாவுக்கு வருவதால் என்ன ஆகப்போகிறது என்று மொத்த மீடியாவும் அவர் பின்னால் செல்ல, அவரோ ஓட்டு போடுவதற்காக இந்தியா வந்திருக்கிறேன் என்று சொல்லி வாக்குச் சாவடிக்குச் செல்கிறார். ஆனால், அங்கு இவரது ஓட்டினை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டதை அறிந்து ‘நானே பெரிய கிரிமினல், என்னிடமே இப்படி ஒரு வேலையா’ என யார் அந்த வேலையை செய்தது என்று தேடிச் செல்கிறார். இது, தமிழக அரசியல்வாதிகள் எந்தளவுக்கு மோசமானவர்கள் என திரைப்படம் சித்தரிப்பதாக இருக்கிறது.
கிரிமினல் திட்டங்களுடன் களமிறங்கும் விஜய்யை, வழக்கம்போல நியாயத்துக்குப் போராடும் ஹீரோக்களை துவம்சம் செய்வதுபோல பிழிந்து எடுக்கின்றனர் அரசியல்வாதிகள். அதன்பிறகு எப்படி விஜய் தனது அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளாலும், மக்களை; குறிப்பாக இளைஞர்களை ஒன்று திரட்டி அரசியல்வாதிகளை வெல்கிறார் என்பதாகவும் டீசர் முடிகிறது.
திருநெல்வேலியில் கந்துவட்டி கொடுமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளித்த சம்பவத்தினை படத்தில் வைத்திருப்பது, இன்னும் என்னென்ன சம்பவங்களை படத்தில் இணைத்திருக்கிறார்கள் என்று யோசிக்க வைக்கிறது. விஜய்யை எதிர்க்கும் அரசியல்வாதிகளில் வரலட்சுமியை முக்கியமான கேரக்டரில் வைத்திருப்பதும், அவரே விஜய்யை நேரடியாக எதிர்ப்பதும் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
ஏர்போர்ட் எண்ட்ரி, ஆக்‌ஷன் சீனில் சூவிங் கம்(Chewing Gum) மெல்லுவது, சுற்றி நூறு பேரை நிற்க வைத்து மேலே நின்றுகொண்டு உபதேசிப்பது, முகத்தில் ஒரு கீரலுடன் அழும் காட்சி என விஜய்யின் திரைவாழ்வில் டிரேட்மார்க்காக மாறிப்போன காட்சிகளுக்கும் சர்கார் டீசரில் பஞ்சமில்லை.
விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது, இன்னும் பலரும் சர்கார் டீசருக்காகக் காத்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள், சர்கார் கதை திருடப்பட்டதாக சொல்லப்படும் ‘செங்கோல்’ கதையின் உரிமம் வைத்திருப்பவர்கள். இது என்ன புது கதை என்பது நாளை(20.10.18) காலை 7 மணி அப்டேட்டில்...

No comments

Powered by Blogger.