ஏர் ஆம்புலன்ஸ் சர்ச்சை: பணத்தை செலுத்திய பன்னீர்

ஓ.பன்னீர்செல்வம் சகோதரரின் சிகிச்சைக்காக இந்திய விமானப்படையின் ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு கட்டணமாக ரூ.14.91 லட்சத்தை ஓ.பி.எஸ். செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசர மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த ஜூலை 1ஆம் தேதி மதுரையில் இருந்து விமானப்படை ராணுவ விமானம் "ஏஎன்-32" மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
இதையடுத்து டெல்லி சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி உடல்நலக் குறைவாக இருந்தபோது அவரை சென்னை அழைத்துவர ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து உதவிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாகத் தெரிவித்தார். ஆனால், நிர்மலா சீதாராமனை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை திரும்பிவிட்டார். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த காரணத்துக்காக பன்னீர், நிர்மலா இருவருமே பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடியும் வலுத்தது.
இது தொடர்பாக விளக்கமளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “துணை முதல்வரின் சகோதரருக்கு அவசர உதவிக்காக ராணுவ ஹெலிகாப்டர் அனுப்பியது உண்மைதான். அவருக்கு மட்டுமல்ல, அவசரக் காலத்தில் யாருக்கு வேண்டுமானாலும் ராணுவ உதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனது சகோதரரின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டருக்கான கட்டணம் ரூ.14.91 லட்சத்தை தமிழக அரசு மூலமாக பன்னீர்செல்வம் வழங்கியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர் ஆம்புலன்ஸ் கட்டணத் தொகைக்கான ரசீது, விமானப் படை தலைமையகத்தில், ஜூலை 26-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக துணை முதல்வர் சென்றதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ரசீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி துணை முதல்வர் தரப்பில் தமிழக அரசு கணக்கில் ரூ. 14.91 லட்சம் செலுத்தப்பட்டது. பின்னர் ’ பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர்’ என்ற பெயரில் வரைவோலை எடுத்து, இந்த பணம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு கேட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி அளித்து, விமானப்படை விமானம் அனுப்பப்பட்டதால், மாநில அரசின் மூலம் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.