‘ஒன்-டே’யிலும் கால் பதிக்கும் ரிஷப் பந்த்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற நிலையில் அடுத்ததாக ஒரு நாள் போட்டித் தொடர் நடக்கவுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை (அக்டோபர் 21) கவுகாத்தியில் தொடங்குகிறது.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ள 12 பேர் கொண்ட இந்திய அணி இன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டி நடக்கும் நாளில்தான் ஆடும் அணி பற்றிய விபரம் தெரிவிக்கப்படும். ஆனால் இம்முறை முன்கூட்டியே அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் விராட் கோலி, ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், மொஹமது ஷமி, சையது கலீல் அஹமது ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். கேப்டனாக கோலியும் விக்கெட் கீப்பராக எம்.எஸ்.தோனியும் செயல்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே போன்றோருக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த இடத்தை, சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பையில் 6 போட்டிகள் விளையாடி 175 ரன்கள் சேர்த்துக் கவனம்பெற்ற அம்பத்தி ராயுடு நிரப்பியுள்ளார். விக்கெட் கீப்பராக தோனி அவரது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் வெறும் பேட்ஸ்மேனாகவே இதில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் அறிமுகம் ஆன ரிஷப் பந்த், சமீபத்தில் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வரைக்கும் தன் மேல் அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை வீணாக்காமல் சிறப்பாகவே விளையாடிவந்தார்.
அதன் பயனாக தற்போது இந்த அணியில் இடம்பெற்றுள்ள ரிஷப் பந்த், நாளை நடக்கவுள்ள முதல் போட்டியில் களமிறங்கும் பட்சத்தில், அவரது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியாக இந்தப் போட்டி அமையவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.