வறுமையின் பிடியில் ஆண்களா, பெண்களா?

வறுமையை ஒழிக்க உலகம் முழுவதும் உள்ள தனிநபர்களின் தரவுகளைச் சேகரிக்க வேண்டியது அவசியமாக இருப்பதாக உலக வங்கி கூறியுள்ளது.
இதுவரையில் வெளியான வறுமை மதிப்பீடுகள் குடும்பங்களின் மீது கவனம் செலுத்துகின்றனவே தவிர, தனிநபரைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையல்ல. எனவே தனிப்பட்ட நபர் ஒருவரின் வறுமை நிலை அவருடைய குடும்பத்தைச் சார்ந்தே அமைகிறது. ஆனால் சர்வதேச வறுமை நிலைகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பின்தங்கியே உள்ளனர். 2013ஆம் ஆண்டு அறிக்கையின்படி, ஆண்களின் வறுமைக்கோட்டு நிலை 12.3 விழுக்காடாகவும், பெண்களின் வறுமைக்கோட்டு நிலை 12.8 விழுக்காடாகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக சப் சஹாரியன் மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில்தான் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகளவில் உள்ளனர்.
ஒட்டுமொத்த குடும்பத்தின் நுகர்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதில் குடும்பத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் வறுமை நிலை குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன. ஆனால் இப்போது உலக வங்கி வெளியிட்டுள்ள பாவர்ட்டி & ஷேர்டு பிராஸ்பெரிட்டி 2018 அறிக்கை தனிநபரின் தரவுகளைச் சேகரித்துள்ளது. 25 வயது முதல் 34 வயது வரையிலான சப் சஹாரியன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் வறுமை நிலை 5.5 விழுக்காடு அதிகமாக உள்ளது. அங்கு ஆண்களின் வறுமை நிலை 27.8 விழுக்காடாகவும், பெண்களின் வறுமை நிலை 22.3 விழுக்காடாகவும் உள்ளது.
திருமணம் மற்றும் பெண்களின் மகப்பேறு காலங்கள் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. இத்தகைய காலங்களில் பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைப்படுவதால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது. வீட்டுக்குள் பெண்ணுக்கு சம உரிமை கொடுக்க மறுப்பதும் இதில் ஒரு காரணமாக உள்ளது. பல நாடுகளில் வீட்டுக்குள் ஆண்களே அதிகாரம் செலுத்தும் நபர்களாக உள்ளனர். எனவே தனிநபர் வறுமை குறித்த தரவுகளைச் சேகரிப்பதே சிரமமானதாக உள்ளது. பல நாடுகளில் இதுகுறித்துப் போதுமான தரவுகள் இல்லை என்பதும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
குறிப்பாகக் குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் தரவுகளைச் சேகரிப்பது சிரமமானதாக உள்ளது. தனிநபர் தரவுகளையும் சேகரித்து சமூகப் பாதுகாப்பு மற்றும் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களைக் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளதாகவும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.