எல்லாளன் நடவடிக்கை காவியமான கரும்புலிக​ளின் நினைவு நாள் இன்றாகும்!

எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.



‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.09.10.2007என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

254

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.

தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்…


அனுராதபுரம் வான்; படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர்.

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான்; தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர்.

அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.

இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது

எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02

எம்.ஐ-17 உலங்கு வானூர்தி – 01

பெல்-212 – 01

பீச் கிராப்ட்- 01,

மு-8 பயிற்சி வானூர்தி – 01

Pவு-6 பயிற்சி வானூர்தி – 03

ஆளில்லா வேவு வானூர்தி – 03

செஸ்னா வானூர்தி – 06

ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள்

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்

சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.

– இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது.

– சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம்; தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது.

– சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது.

– சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது.


– விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது.

– இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம், மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது.

இளங்கோவனின் இறுதிக் குரல்….



விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.

வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.

‘தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..” என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.


இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது.



அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

லெப்.கேணல் இளங்கோ



அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.

எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.

உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.

சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது.

21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது.

லெப். கேணல் வீமன்



பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.

வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது.

இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.

வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.

அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.

பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான்.

லெப்.கேணல் மதிவதனன்



என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.

அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.

பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான்.

மேஜர் இளம்புலி


இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.

இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான்.

இவர்களோடு,

கப்டன் தர்மினி



கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா,



கப்டன் புரட்சி



கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,

மேஜர் சுபன்

மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,

மேஜர் காவலன்


மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

கப்டன் கருவேந்தன்



கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,

கப்டன் புகழ்மணி


கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,

மேஜர் எழில்இன்பன்



மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,

கப்டன் புலிமன்னன்



கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,

கப்டன் அன்புக்கதிர்


கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,

கப்டன் சுபேசன்


கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,

கப்டன் செந்தூரன்

கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,



லெப். அருண்

லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,

கப்டன் பஞ்சீலன்

கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,

மேஜர் கனிக்கீதன்


மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,

கப்டன் ஈழப்பிரியா


கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

கப்டன் அறிவுமலர்

கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,

கப்டன் ஈழத்தேவன்

கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.